விளையாட்டு

'சுழல் பந்தில் திணறும் விராட் கோலி' - இர்பான் பதான் விடுக்கும் எச்சரிக்கை

'சுழல் பந்தில் திணறும் விராட் கோலி' - இர்பான் பதான் விடுக்கும் எச்சரிக்கை

JustinDurai

ஆஸ்திரேலிய சுழல் பந்து வீச்சாளர்களின் பந்துகளில் விராட் கோலி திணறக்கூடும் என்கிறார் இர்பான் பதான்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் முழு ஃபார்முக்கு திரும்பியுள்ள அவர், டெஸ்ட் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.  

விராட் கோலி இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 48.05 சராசரியில் 1,682 ரன்கள் எடுத்துள்ளார். அந்த அணிக்கு எதிராக 7 சதங்கள் அடித்துள்ளார். இந்த நிலையில், ஆஸ்திரேலிய சுழல் பந்து வீச்சாளர்களின் பந்துகளில் விராட் கோலி திணறக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இர்பான் பதான், ''பொதுவாகவே விராட் கோலி சுழல் பந்தை எதிர்கொள்வதில் சிரமப்பட்டு வருகிறார். இப்போதிருக்கும் பெரிய கேள்வி என்னவென்றால், ஆஸ்திரேலிய அணியின் நாதன் லியோன், ஆஷ்டன் அகர் ஆகியோரின் சுழல் பந்து வீச்சை கோலி எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதுதான். சுழல் பந்தை எதிர்கொள்ள விராட் கோலி இன்னும் கூடுதல் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சுழலுக்கு எதிரான அவருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் குறைந்துவிட்டது என்று நினைக்கிறேன்'' என்றார்.  

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான், ஆர். அஸ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.