நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இதனையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து வென்றது. இந்த டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி மொத்தமாக சேர்த்தே 38 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து பேட் செய்தது. அப்போது அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் 3 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அந்த நேரத்தில் இந்தியக் கேப்டன் விராட் கோலி கடுமையான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். அவருடைய ஆக்ரோஷம் அளவுக்கு மீறி சென்றது. கோலியும், வில்லியம்சனும் நண்பர்கள் என்றாலும் இத்தகைய ஆக்ரோஷம் தேவையா என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் விமர்சித்தனர்.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தோல்விக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் விராட் கோலி. அப்போது ஒரு நிருபர் "போட்டியின்போது மைதானத்தில் உங்களுடைய ஆக்ரோஷம் சரியானதாக இருக்கிறதா ? வில்லியம்சன் அவுட்டானபோது நீங்கள் நடந்துக்கொண்டவிதம் சரியானதா ? இந்திய அணியின் கேப்டனாக மைதானத்தில் உங்கள் நடவடிக்கை மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறதா ? என்று கேள்விகளை அடுக்கினார்.
இதற்கு பதிலளித்த கோலி "மைதானத்தில் என்ன நடந்தது என்று நீங்கள் தெரிந்துகொண்டு கேள்வியை கேட்க வேண்டும். என்ன நடந்தது என்று தெரியாமல் பாதி கேள்விகளை கேட்கக் கூடாது. அதையும் மீறி நீங்கள் சர்ச்சையை கிளப்ப விரும்பினால், இது சரியான நேரமும் இடமும் அல்ல. அன்று நடந்தது குறித்து போட்டியின் நடுவரிடம் பேசினேன், அதில் ஒரு பிரச்னையும் இல்லை என்று தெரிவித்துவிட்டார். நன்றி" என கோபமாக முடித்துக்கொண்டார்.