விளையாட்டு

"அவரின் மந்திர வார்த்தைகள் என்னை எனக்கே புரிந்துகொள்ள வைத்தன"-கோலி&தோனி பிரண்ட்ஷிப் லெவல்

"அவரின் மந்திர வார்த்தைகள் என்னை எனக்கே புரிந்துகொள்ள வைத்தன"-கோலி&தோனி பிரண்ட்ஷிப் லெவல்

Rishan Vengai

இந்தியாவின் நட்சத்திர பேட்டரான விராட் கோலி, தன் வாழ்க்கையின் கடினமான நேரத்தில் தோனி எப்படி தன் வாழ்க்கையை மாற்ற உதவினார் என்ற நெகிழ்ச்சியான தகவலை பகிர்ந்துள்ளார்.

கொரோனா காலகட்டமானது இரண்டு இந்திய நட்சத்திர வீரர்களுக்கு ஒரு மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தி தந்திருந்தது. அதில் ஒரு நபர் தோனி என்றால், மற்றொரு நபர் விராட் கோலி. தோனி கொரோனாவிற்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பி ஒரு ஃபேர்வெல் போட்டியோடு ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, அப்படி ஒரு நிகழ்வானது நிகழாமலே தன்னுடைய ஓய்வை அறிவித்தார், இந்திய கிரிக்கெட்டின் எப்போதைக்கும் சிறந்த கேப்டனான எம் எஸ் தோனி. ஒருபுறம் எம் எஸ் தோனிக்கு இப்படி ஒரு முடிவு என்றால், மறுபுறம் தன் கிரிக்கெட் வாழ்க்கையின் மோசமான ஒரு கட்டத்தை காணவேண்டியிருந்தது விராட் கோலிக்கு. 2020லிருந்து 2022வரை தன் மொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான கட்டத்தை சந்தித்திருந்த விராட் கோலி, இந்தியாவிற்காக ரன்களை குவிப்பதில் தடுமாறி வந்தார்.

விமர்சனங்களால் துளைக்கப்பட்ட விராட் கோலி!

3 வருடங்களாக சதத்தையே பதிவு செய்ய முடியாமல் தடுமாறி வந்த விராட் கோலி, தன்னுடைய பழைய பார்மை திரும்ப கொண்டுவரும் முயற்சியில் தோல்வியையே சந்தித்து வந்தார். இந்நிலையில் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் வெளிநாட்டின் வீரர்கள் என பலரும் விராட் கோலியை விமர்சனங்களால் துளைத்து எடுத்தனர். ஒருபுறம் விராட் கோலி அவ்வளவு தான் என்ற விமர்சனமும், மறுபுறம் அவரை ஓய்வெடுக்க சொல்லுங்கள் என்ற கொடூரமான விமர்சனங்களும் மாற்றி மாற்றி வைக்கப்பட்டன.

சர்வதேச போட்டிகளில் 70 சதங்களை பதிவு செய்திருந்த ஒரு காலத்திற்கும் சிறந்த வீரனை, சென்ற இடமெல்லாம் சிதைத்து கொண்டிருந்தனர். தொடர் விமர்சனங்களை தொடர்ந்து அவர் 1 மாத காலம் ஓய்வை ஏற்றுக்கொண்டார் கோலி.

1 மாத காலம் பேட்டையே தொடவில்லை என்று பகிரங்கமாக அறிவித்த விராட் கோலி!

அந்த ஒரு மாத கால ஓய்விற்கு பிறகு அணிக்கு திரும்பிய விராட் கோலி, தன்னால் ஒரு மாத காலமாய் பேட்டையே தொடமுடியவில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார். மேலும் “என் கடினமான நேரத்தில், தோனி மட்டும் தான் என்னைத் தொடா்புக் கொண்டாா். மற்றவர்களிடமும் என் நம்பர் இருக்கிறது, ஆனால் அவர்கள் தொலைக்காட்சிகளில் எனக்கு பரிந்துரை செய்துக் கொண்டிருந்தாா்கள்” என்று கூறினார்.

71ஆவது சதத்தை பதிவு செய்து தன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

ஒருமாத ஓய்விற்கு பிறகு, 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆசியகோப்பை தொடருக்கு திரும்பிய கண்ட விராட் கோலி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 வடிவத்தில் தனது முதல் சதத்தையும், 71ஆவது சர்வதேச சதத்தையும் எடுத்து விமர்சனம் செய்த அனைவருக்கும் தன்னுடைய பேட்டால் பதிலடி கொடுத்தார். அதன் பிறகு அவர் நிகழ்த்தி காட்டியதெல்லாம் ஒரு மேஜிக் நிகழ்வு போல் இருந்தது. அந்தவகையில் 71ஆவது சதத்திற்கு பிறகு 2 ஒருநாள் தொடரில் 72, 73, 74 என அடுத்தடுத்து மேலும் 3 சதங்களை எடுத்துவந்து அசத்தினார்.

என் கடினமான நேரங்களில் என்னை தொடர்புகொண்ட ஒரே நபர் தோனி தான் - கோலி

RCB போட்காஸ்ட் சீஸன் 2 நிகழ்ச்சியின் உரையாடலில் பேசியிருக்கும் விராட் கோலி, “எனது இத்தனைகால கிரிக்கெட் வாழ்க்கையில் நான் சுதந்திரமாக உணர்ந்து சில காலம் ஆகிவிட்டது. என் கடினமான காலங்களில் நான் எப்படியெல்லாம் உணர்வுகளுக்கு ஆளாகினேன் என்று என்னை அருகில் இருந்து பார்த்தவர் என் மனைவி அனுஷ்கா தான். ஆனால் என்னுடைய மோசமான நேரங்களில் என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை எல்லாம் தாண்டி, என்னை தொடர்புகொண்டு பேசிய உண்மையான ஒரே நபர் எம் எஸ் தோனி தான்.

தோனியின் அந்த மந்திர வார்த்தைகள் தான் என்னை மாற்ற உதவியது!- விராட் கோலி

நீங்கள் சாதரண நாட்களில் அவருக்கு அழைக்கும் போது, அவரை தொடர்புகொள்ளவே முடியாது. அரிதாகவே தொடர்பு கொள்ள முடியும். எதேச்சையாக எதாவது நாளில் நான் அவரை அழைத்தால், 99 சதவிகிதம் அவர் தொலைபேசியை எடுக்க மாட்டார். ஏனென்றால் அவர் தொலைபேசியைப் பார்ப்பதே இல்லை. ஆனால் அவராகவே என்னை இரண்டு முறை தொடர்பு கொண்டார்.

என் கடினமான நேரத்தில் ஓய்வில் இருந்த போது தொடர்பு கொண்ட அவர். அப்போது அவர் சொன்னது என்னவென்றால், `நீங்கள் வலிமையானவராகவும், பலம் வாய்ந்த தனிநபராகவும் இருப்பீர்கள் என எதிர்பார்க்கப்படும்போது, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என கேட்பதற்கு மக்கள் மறந்து விடுகிறார்கள்’ என்று கூறினார்.

அந்த மந்திர வார்த்தைகள் என்னை இரண்டு அடி பின்னோக்கி செல்லவைத்து என்னை கண்டறிய உதவியது!

ஆக அது “தோனியின் வார்த்தைகள்”. அவரின் அந்த வார்த்தைகள் என் மனதைத் தொட்டது. ஏனென்றால் நான் எப்போதும் அவரை, மிகவும் நம்பிக்கையுள்ள, மனதளவில் மிகவும் வலிமையான, எந்த சூழ்நிலையையும் சகித்துகொண்டு, ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் ஆளுமையான நபராகவும், எங்களுக்கு வழி காட்டக்கூடிய ஒருவராகவும் பார்த்திருக்கிறேன்”. சில நேரங்களில் நீங்கள் புரிந்துகொள்வது என்னவென்றால், ஒரு மனிதனாக வாழ்க்கையின் எந்த நேரத்திலும் நீங்கள் இரண்டு படிகள் பின்வாங்க வேண்டும். அதுதான் நீங்கள் முன்னர் எப்படி இருந்தீர்கள், இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள உதவும்" என்று கூறினார்.

மேலும் பேசுகையில், “என்னை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது, ஏனென்றால் அவரும் அதை கடந்து வந்துள்ளார்! இந்த நிகழ்வென்பது அனுபவத்திற்கு அப்பாற்பட்டது. முன்பொரு தருணத்தில் இந்த உணர்வுகளை நீங்கள் அனுபவித்திருந்தால், தற்போது அனுபவிக்கும் மற்றொரு நபரை உங்களால் எளிதாக புரிந்துகொள்ள முடியும். அப்படி தான் அவர் என்னை புரிந்துகொண்டார், ஏனென்றால் அவரும் இதைபோலான ஒரு கடினமான நேரத்தை சந்தித்திருக்கிறார்” என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.