விளையாட்டு

லாராவை பின்னுக்கு தள்ளி அடிலெய்டில் விராட் கோலி நிகழ்த்திய சாதனைகள்!

லாராவை பின்னுக்கு தள்ளி அடிலெய்டில் விராட் கோலி நிகழ்த்திய சாதனைகள்!

Rishan Vengai

இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி அடுத்தடுத்து பல ரெக்கார்டுகளை படைத்துள்ளார்.

2022 டி20 உலகக்கோப்பையின் இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அரைசதத்தால் முதல் இன்னிங்க்ஸில் 168 ரன்கள் எடுத்தது. 4ஆவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா கூட்டணி 61 ரன்கள் சேர்த்தது. 4 பவுண்டரிகள், 1 சிக்சர் என விளாசிய விராட் கோலி அரைசதம் எடுத்து அசத்தினார்.

அடிலெய்டு மைதானத்தில் லாரை பின்னுக்கு தள்ளி சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் குவித்த ரன்களுக்கு பிறகு அடிலெய்டு ஓவல் மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை, முன்னாள் வெஸ்ட் இண்டிஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாராவைத் தாண்டி படைத்துள்ளார் விராட் கோலி.

அடிலெய்டு ஓவல் மைதானத்தில் பேட் செய்த வெளிநாட்டு வீரர்களில் 15 இன்னிங்ஸ்களில் லாரா 940 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் கோஹ்லி 15 இன்னிங்க்ஸ்களில் 950 ரன்களை கடந்து ஜாம்பவான் லாராவை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்

சர்வதேச டி20 போட்டிகளில் 4000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி.

டி20 நாக்அவுட் போட்டிகளில் அதிக அரைசதங்கள்

டி20 உலகக் கோப்பையின் நாக் அவுட் போட்டிகளில் கோஹ்லி அடித்த நான்காவது அரை சதம் இதுவாகும். அந்த வகையில் ஒரு அரைசதத்திற்கு மேல் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையும் விராட் கோலி வசமே உள்ளது.