விளையாட்டு

“மகளின் புகைப்படத்தை வெளியிட வேண்டாம்” - விராத் கோலி உருக்கமான வேண்டுகோள்!

“மகளின் புகைப்படத்தை வெளியிட வேண்டாம்” - விராத் கோலி உருக்கமான வேண்டுகோள்!

newspt

இந்திய - தென்னாப்பிரிக்க தொடரில் எதார்த்தமாக படம் பிடிக்கப்பட்ட தங்களது மகளின் புகைப்படத்தை பகிர வேண்டாம் என்று, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராத் கோலி, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்தநிலையில், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில், இரு அணிகளுக்கிடையேயான 3-வது ஒருநாள் போட்டி நேற்று கேப் டவுனில் நடைபெற்றது. முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 283 ரன்களுக்கு ஆட்டமிழந்து, ஒருநாள் தொடரை இழந்து வாஷ் அவுட் ஆனது.

நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியின்போது விராத் கோலி 25-வது ஓவரில் அரை சதம் எடுத்தார். அப்போது மைதானத்தில் பால்கனியில் இருந்த குழந்தை வாமிகாவுடன் இருந்த அனுஷ்கா சர்மாவை நோக்கி, இந்த அரை சதத்தை குழந்தைக்கு அர்ப்பணிப்பதாக சைகை செய்தார். அதற்கு அனுஷ்கா சர்மாவும் பதிலளிக்கும் வகையில், கோலிக்கு கையசைத்தார். இது தொலைக்காட்சி கேமராவில் பதிவாகி, பின்பு இணையம் முழுவதும் வைரலானது. ஏனெனில், இதுவரை அனுஷ்கா சர்மா - விராத் கோலி தம்பதியின் மகள் வாமிகா புகைப்படம் இதுவரை வெளியானதில்லை.

வாமிகா பிறந்த பொழுதே விராத் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதி இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில், “நாங்கள் வாமிகாவின் புகைப்படத்தை அவளது அனுமதி இல்லாமல் வெளியிட மாட்டோம். அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். எனவே யாரும் வாமிகாவின் புகைப்படத்தை எப்பொழுதும் வெளியிட வேண்டாம்” என்று தெரிவித்திருந்தனர்.

அதன்பிறகு விராத் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இணைந்து எங்கு வெளியே வந்தாலும் வாமிகாவின் முகத்தை மூடியே சென்றனர். முடிந்தவரை வாமிகாவின் புகைப்படத்தை வெளிவராமல் பார்த்துக் கொண்டனர். இந்நிலையில் வாமிகாவின் புகைப்படம் நேற்று முதல்முறையாக வெளியாகி வைரல் ஆனதால், இது குறித்து விராத் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.

“நேற்று எங்களுடைய மகள் வாமிகாவின் புகைப்படம், மைதானத்தில் எடுக்கப்பட்டு, அதிகமாக பகிரப்பட்டுள்ளது. அங்கு கேமரா இருந்தது எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு தெரியாமலேயே புகைப்படம் எடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது. நாங்கள் முன்பு அறிவித்தது போல வாமிகாவின் முகத்தை வெளியே தெரியாமல் பார்த்து வருகிறோம். இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் வாமிகாவின் புகைப்படத்தை பகிராமல் இருந்திருந்தால் நன்றி” இவ்வாறு தெரிவித்திருந்தார்.