விளையாட்டு

“கேரளாவில் இருப்பது எனக்கு பேரின்பம்” - கோலி நெகிழ்ச்சி

“கேரளாவில் இருப்பது எனக்கு பேரின்பம்” - கோலி நெகிழ்ச்சி

rajakannan

கேரளாவின் இயற்கை அழகு பற்றியும், சுற்றுலா பயணிகளுக்கான கவனிப்பு பற்றியும் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் போட்டிகள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது. மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் இன்று 4வது ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில், ரோகித் சர்மா, அம்பத்தி ராயுடுவின் அதிரடி சதத்தால், 224 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.  

இதனையடுத்து, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை கடைசி ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றால் இந்தியா கோப்பையை வெல்லும். வெஸ்ட் இண்டீஸ் வெற்றிப் பெற்றால் தொடர் சமன் ஆகும். திருவனந்தபுரத்தில் கட்டப்பட்டுள்ள புது மைதானத்தில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இந்நிலையில், 5வது ஒருநாள் போட்டிகள் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கியுள்ளார். ரிசார்ட்டில் அவர்களுக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. ரிசார்ட்டில் உள்ள பார்வையாளர்கள் டைரியில் விராட் கோலி சில குறிப்புகளை எழுதியுள்ளார்.

அதில், “கேரளாவில் இருப்பது என்பது பேரின்பத்திற்கு குறைவில்லாத விஷயம். கேரளா வருவதை நான் மிகவும் விரும்புகிறேன். இங்குள்ள இடங்களின் தன்மை எனக்கு மிகவும் பிடிக்கும். கேரளாவின் அழகு என்பது அனுபவிக்க வேண்டிய ஒன்று. ஒவ்வொருவரும் இங்கு வந்து இந்த அழகினை அனுபவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது கடவுளின் தேசம். கேரளா எல்லோரும் வருவதற்கு முற்றிலும் பாதுகாப்பான இடம். ஒவ்வொரு முறையும் என்னை மகிழ்விக்கும் இந்த அற்புதமான இடங்களுக்கு நன்றி” என விராட் கோலி குறிப்பிட்டுள்ளார். 

விராட் கோலியின் இந்தப் பதிவினை கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கேரளாவின் இயற்கையை பாராட்டிய விராட் கோலிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.