இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மும்பை கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரன் ஏதும் சேர்க்காமல் வெளியேறினார். அவரது விக்கெட்டை LBW முறையில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் வீழ்த்தி இருந்தார்.
இந்த நிலையில், கோலி, அவுட்டா? அல்லது நாட்-அவுட்டா? என்ற குழப்பம் எழுந்துள்ளது. அது சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் என அனைவரும் அம்பயரின் முடிவு குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்த போட்டியின் 29-வது ஓவரை அஜாஸ் படேல் வீசி இருந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் தான் கோலி, அவுட்டாகி இருந்தார். அஜாஸ் வீசிய பந்தை ஃப்ரெண்ட் ஃபூட்டுக்கு வந்து டிபென்ஸ் ஆட முயன்றார் கோலி. ஆனால் அந்த பந்து பேட்டில் பட்டு, பின்னர் Pad-இல் பட்டது போல இருந்தது. நியூசிலாந்து அணி அதற்கு அப்பீல் செய்ய கள நடுவர் அவுட் கொடுத்தார். உடனடியாக கோலி, நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்தார்.
டிவி அம்பயர் பல ஆங்கிள்களில் அதை பார்த்தார். பின்னர் அவுட் கொடுக்கப்பட்டது. அது தான் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. “பந்து பேட்டில் பட்டு இன்சைட் எட்ஜாகி பின்னர் Pad-இல் பட்டது தெளிவாக உள்ளது. பேட்டில் பந்து பட்டதும் பந்து திரும்பியதே அதற்கு சான்று. அதை வைத்தே கள அம்பயரின் முடிவை மூன்றாவது அம்பயர் மாற்றி இருக்கலாம். மிகவும் மோசமான அம்பயரிங் இது. கோலியின் எக்ஸ்பிரெஷனே அதனை தெளிவாக வெளிகாட்டி உள்ளது” என தெரிவித்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் வாடேகர்.
ரசிகர் ஒருவர், “அவர் மூன்றாவது நடுவரா இல்லை மூன்றாம் தர நடுவரா?” என நடுவரின் முடிவை விமர்சித்துள்ளார்.