விளையாட்டு

இந்தியா-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: சாதனையை நோக்கி விராட்

இந்தியா-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: சாதனையை நோக்கி விராட்

webteam

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் விராட் கோலி பல சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது. 

இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது. இந்தத் தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடும் பட்சத்தில் பல சாதனைகளை படைக்கவுள்ளார்.  இவர் இந்தத் தொடரில் 242 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்கள் எடுத்த நான்கவது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார். 

விராட் கோலி இதுவரை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 758 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்களை அடித்துள்ளார். இதற்கு முன்பு இந்தியா சார்பில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் சச்சின்(1741 ரன்கள்),சேவாக்(1306 ரன்கள்) மற்றும் ராகுல் திராவிட்(1252 ரன்கள்) ஆகிய மூவரும் 1000 ரன்களை கடந்துள்ளனர். 

மேலும் இந்தத் தொடரில் விராட் கோலி 281 ரன்கள் குவித்தால் அதிகவேகமாக சர்வதேச கிரிக்கெட்டில் 21ஆயிரம் ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார். இதுவரை விராட் கோலி 432 இன்னிங்ஸில் விளையாடி 20,719 ரன்களை குவித்துள்ளார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் தனது 473 இன்னிங்ஸில் 21ஆயிரம் சர்வதேச ரன்களை அடித்து சாதனை புரிந்துள்ளார். இந்தத் தொடரில் விராட் கோலி இதனை முறியடிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.