விளையாட்டு

'அடுத்த டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பேயில்லை' - அடித்துக் கூறும் ஜாஃபர்

'அடுத்த டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பேயில்லை' - அடித்துக் கூறும் ஜாஃபர்

JustinDurai

அடுத்த டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்று ஆரூடமாக கூறுகிறார் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர்.

2024 டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக மூத்த வீரர்களை கழற்றிவிட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் அடங்கிய அணியை உருவாக்கும் வேலையை செய்து வருகிறது பிசிசிஐ. அதனாலயே 2022 டி20 உலககோப்பைக்கு பின் இதுவரை நடைபெற்ற இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர்கள் இல்லாமல் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணியே களம் கண்டது.

பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பதற்காக மூத்த வீரர்களுக்கு டி20 போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்படுவதாக பிசிசிஐ சொல்கிறது. ஆனால் பிசிசிஐயின் திட்டம் என்னவென்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் எனவும் அதேசமயம் விராட் கோலி அந்த தொடரில் ஆடுவார் என்று ஆரூடமாக கூறுகிறார் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர்.

இதுதொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய வாசிம் ஜாஃபர், ''ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் வரவுள்ளன. அதன்பிறகு ஐபிஎல் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறுகிறது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெறலாம். இனிவரும் காலங்களில் கிரிக்கெட் விளையாட்டு என்பது இளம் வீரர்களுக்கானதாகவே இருக்கும். என்னுடைய தனிப்பட்ட கண்ணோட்டத்தில் சொல்கிறேன். ரோகித் சர்மா அடுத்த டி20 உலகக் கோப்பையில் நிச்சயம் ஆடமாட்டார். அதேசமயம் விராட் கோலி விளையாடலாம். 2024 டி20 உலகக் கோப்பையின் போது ரோகித் சர்மா 36 வயதை எட்டியிருப்பார். அதனால் அவருக்கு வாய்ப்பில்லை.

இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் வழிகாட்டுதல் தேவையா என்று கேட்டால்,  அது தேவையில்லை என்றுதான் சொல்லுவேன். இளம் வீரர்களுக்கு   ஐபிஎல்லில் நல்ல அனுபவம் கிடைப்பதால் அவர்களை வழிநடத்த யாருடைய தயவும் தேவையில்லை" என்று ஜாஃபர் கூறினார்.

தவற விடாதீர்: விராட் கோலி மாதிரி ஒரு ப்ளேயரை டி20-ல மிஸ் பண்ணலாமா நீங்க?’- பிசிசிஐ-ஐ விளாசும் ரசிகர்கள்