விளையாட்டு

'கோலிக்கான இரண்டு ஆப்சன்கள்' - புதிய பாதையில் இந்திய அணியும் பரிதவிக்கும் கோலியும்

'கோலிக்கான இரண்டு ஆப்சன்கள்' - புதிய பாதையில் இந்திய அணியும் பரிதவிக்கும் கோலியும்

webteam

மாற்றம் ஒன்றே மாறாதது. உலகின் அத்தனைக்கும் பொருந்தக்கூடிய தத்துவம் இது. காலத்தை பொறுத்து மாறுதல்களுக்கு உட்பட மறுப்பவர்களை காலம் எப்போதுமே சோதித்துதான் பார்க்கும். அக்னி பரிட்சைக்கு உட்படுத்தும். பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வைக்கும். இந்திய கிரிக்கெட் அணியும் அப்படி ஒரு இக்கட்டான கட்டத்தில்தான் இப்போது நிற்கிறது. இந்திய கிரிக்கெட் அணி ஒரு மாற்றத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அணியுடன் பயணிக்கும் தவிர்க்கவே முடியாத மூத்த வீரரான கோலி அந்த மாற்றத்திற்கு தன்னை தகவமைத்துக் கொள்ள முடியாமல் திணறி வருகிறார். தேக்கமடைந்து நிற்கும் கோலியை அப்படியே விட்டுவிட்டு தங்களின் பயணத்தை தொடர்வதா? அல்லது அவரின் தடுமாற்றங்களை ஏற்றுக்கொண்டு நம்பிக்கையின் பொருட்டு அவரையும் சுமந்து கொண்டே பயணிப்பதா? என்பதுதான் இந்திய அணியின் இப்போதைய தயக்கம்.

சமீபமாக மூன்று ஃபார்மட்களிலுமே கோலி மெச்சத்தகுந்த பெர்ஃபார்மென்ஸ்களை கொடுக்காவிடிலும், முதன்மையாக டி20 போட்டிகளை முன்வைத்தே இந்திய அணியில் கோலியின் தேர்வு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. காரணம், வெகு விரைவில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பைத் தொடர். 'எத்தனையோ வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அப்படியிருக்கையில், வெறுமென நம்பிக்கையின் அடிப்படையில் கோலிக்கு மட்டும் வாய்ப்பளிக்கப்படுவது ஏன்? கோலி பிரபலமான வீரராக இருக்கலாம். ஆனால், அதற்காக நாம் தொடர்ந்து மோசமாக ஆடினாலும் அணியில் இடம் கிடைக்கும் என நினைத்துவிடக்கூடாது. உங்களால் அஷ்வினை ட்ராப் செய்ய முடியுமெனில் கோலியையும் அணியிலிருந்து ட்ராப் செய்ய முடியும். அவர் ஒன்றும் நாம் பார்த்து வியந்த பழைய கோலி இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்' என அணியில் கோலியின் இடம் குறித்து காட்டமான விமர்சனத்தை கபில்தேவ் முன்வைத்துள்ளார். இதே கருத்தை கோலியின் பெயரை குறிப்பிடாமல் சேவாக்கும் கூறியிருக்கிறார். கோலியின் மோசமான ஃபார்ம் குறித்த அவதானித்து வந்த அனைவரும் இப்போது அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கின்றனர். அது இந்திய அணிக்கு கோலி வேண்டுமா வேண்டாமா எனும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

இந்த விவாதத்திற்கு வித்திட்டிருக்கும் இந்திய அணியின் அந்த உருமாற்றம்தான் என்ன? கோலியால் எதுவாக மாற முடியவில்லை? எந்த மாற்றம் கோலியை தடுமாற செய்கிறது? இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் சமீபத்தில் நடந்து முடிந்ததல்லவா? அந்தத் தொடரில் இந்திய அணி எடுத்த மிக முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று ரிஷப் பண்ட்டை ஓப்பனராக்கியது. கடைசி 2 டி20 போட்டிகளிலும் ரோஹித்துடன் பண்ட்தான் ஓப்பனராக இறங்கியிருந்தார். அவர் பெரிதாக சோபிக்காவிடிலும் அவரை ஓப்பனராக்கிய இந்த முடிவே இந்திய அணியின் மனமாற்றத்தை படம் போட்டு காட்டுகிறது. டி20 போட்டிகளை அணுகும் முறையில் மாற்றம் தேவை என்பதை இந்திய அணி உணர தொடங்கியிருக்கிறது. ஒரு 20 ஓவர் இன்னிங்ஸ் முழுவதும் இந்திய அணி ஒரே அணுகுமுறையோடு ஆடுவதில்லை. பவர்ப்ளேயில் முதல் 2-3 ஓவர்களை கொஞ்சம் நிறுத்தி நிதானமாக ஆட பார்ப்பார்கள். எஞ்சியிருக்கும் பவர்ப்ளே ஓவர்களில் கொஞ்சம் அதிரடி. மிடில் ஓவர்களில் பார்ட்னர்ஷிப் கட்டமைக்கும் விதத்தில் மீண்டும் நிதானம். 13 ஓவருக்கு மேல் கொஞ்சம் கியரை மாற்ற தொடங்கி டெத் ஓவரில் ஒரு பெரும் பாய்ச்சல். இதுவரை இந்திய அணி டி20 போட்டிகளை அணுகும் விதம் இதுவாகத்தான் இருந்தது. இதில்தான், இந்திய அணி மாற்றத்தை கொண்டு வர நினைக்கிறது. அது காலத்தின் கட்டாயமும் கூட. 'ஒவ்வொரு பந்தையும் சிக்சராக்க முயற்சிப்பதே டி20 பேட்டர்களின் நோக்கம்' என வர்ணிக்கப்பட்டாலும், இந்திய பேட்டர்கள் இதுவரை அப்படி ஆடுவதை வழக்கமாக கொண்டிருக்கவில்லை. இனி அப்படித்தான் ஆட வேண்டும் என்கிற முயற்சியில்தான் முதல் ஓவரிலேயே ரிவர்ஸ் ஸ்வீப் ஆடும் ரிஷப் பண்ட்டை ஓப்பனராக்கி பார்க்கிறது ரோஹித் - டிராவிட் கூட்டணி. மேலே குறிப்பிட்டதை போல செட்டில் ஆகி டெத் ஓவர்களில் அடிப்பதெல்லாம் கதைக்கு உதவாது. முதல் ஓவரிலிருந்தே சமரசமில்லாமல் அட்டாக் செய்ய வேண்டும். அதனால்தான் பண்ட் ஓப்பனிங் வந்தார். ரோஹித் முதல் பந்தையே பௌலரின் தலைக்கு மேல் பறக்கவிடும் முனைப்போடு ஆடுகிறார்.

இந்த நவீன அணுகுமுறைக்கு கோலி ஒத்து வருவாரா என்பதுதான் பெரும் கேள்வியாக இருக்கிறது. இந்த இங்கிலாந்து தொடரிலுமே ஆடிய 2 டி20 போட்டிகளிலுமே அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மேலும், வருங்காலத்தில் கோலியால் இந்த மாற்றத்திற்கு முழுமையாக தயாராக முடியும் என்கிற நம்பிக்கையை வைப்பதிலும் குழப்பம் இருக்கிறது. ஏனெனில், கோலியின் சமீபத்திய ரெக்கார்டுகள் அப்படி. ஐ.பி.எல் 2020 சீசனில் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 121.35. 2021 சீசனில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 119.46. 2022 சீசனில் 115.98. 120 என்பதே டி20 யை பொறுத்தவரைக்கும் ரொம்ப சுமாரான ஸ்ட்ரைக் ரேட்தான். அந்த 120 ஐ விடவும் குறைவாகத்தான் கடந்த இரண்டு சீசன்களிலும் கோலி ஸ்கோர் செய்திருக்கிறார். தொடர்ந்து தேய்ந்து கொண்டேதான் இருக்கிறார்.

இந்திய அணியில் சர்வதேச போட்டிகள் என எடுத்துக் கொண்டாலும் சமீபத்தில் கோலியின் நம்பர் 3 இடத்தில் இருக்கும் ஆடியிருக்கும் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா ஆகியோர் கோலியை விட மிகச்சிறப்பாகவே ஆடியிருக்கின்றனர். ஸ்ட்ரைக் ரேட்டும் கோலியை விட சிறப்புதான். குறிப்பாக, தீபக் ஹூடா அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் சரி இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் சரி வெளுத்து வாங்கியிருக்கிறார். 3 போட்டிகளில் 184 ரன்களை 179.4 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார். இதில், அயர்லாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் நம்பர் 3 இல் இறங்கி 182 ஸ்ட்ரைக் ரேட்டில் ஒரு சதமும் அடித்திருந்தார். இப்படியான தீபக் ஹூடாவை கோலிக்காக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் டிராப் செய்தார்கள்.

கோலி அணியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அணியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வீரர்கள் தொடர் வாய்ப்புகள் வழங்கப்படாமல் கோலிக்காக பென்ச்சில் உட்கார வேண்டியிருக்கிறது. இவையெல்லாம்தான் கோலியின் மீதான அழுத்தத்திற்கு காரணமாகியிருக்கிறது. உலகக்கோப்பை அணியில் கோலி இடம்பெற வேண்டுமா? எனும் கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.

ரோஹித்தும் டிராவிட்டும் கோலி மீது நம்பிக்கை தெரிவித்திருந்தாலும் கோலி கேட்காமலேயே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருக்கு ஓய்வை அளித்திருக்கிறது பிசிசிஐ. இப்போது கோலியின் முன் இரண்டு வாய்ப்புகள் இருக்கிறது. சமரசமில்லாமல் அணியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். அதன்மூலம் அவர் மீதான அத்தனை தயக்கங்களையும் விமர்சனங்களையும் உடைக்க வேண்டும். கேள்விகளுக்கு இடமே இல்லாமல் உலகக்கோப்பை அணியில் நம்பர் 3 பேட்ஸ்மேனாக இறங்க வேண்டும். இல்லையேல் இரண்டாவது வாய்ப்பு, யதார்த்தத்தை உணர வேண்டும். 30 களுக்குப் பிறகு எல்லா வீரர்களுக்குமே ஏற்படும் தடுமாற்றம்தான் இப்போது கோலிக்கும் ஏற்பட்டிருக்கிறது. இப்படியான சமயங்களில் பல வீரர்களும் தங்களுக்கு ஒவ்வாமல் இருக்கும் எதோ ஒரு ஃபார்மட்டை விட்டுக்கொடுத்தே தங்களின் கரியரை நீட்டித்திருக்கின்றனர். அதை கோலியும் உணர வேண்டும். உணரும்பட்சத்தில், கேப்டன்சியை போல் அல்லாமல் டி20 போட்டிகளிலிருந்து ஒரு கௌரவமான விலகல் கோலிக்கு சாத்தியப்படும். கோலி எதை நோக்கி நகரப்போகிறார் என்பதே வரவிருக்கும் தினங்களின் சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது.

-உ.ஸ்ரீராம்