விளையாட்டு

குறைந்த போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்த கேப்டன் - கோலி சாதனை

குறைந்த போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்த கேப்டன் - கோலி சாதனை

webteam

விராட் கோலி குறைவான இன்னிங்ஸ்சில் கேப்டனாக 4000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் விளையாடிவரும் விராட் கோலி கேப்டனாக 4 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இந்த ரன்களை கோலி 63 இன்னிங்ஸில் அடித்துள்ளார். இதன்மூலம் தென் ஆப்பிரிகாவின் ஏ.பி.டிவில்லியர்ஸ்யின் 77 இன்னிங்ஸ்சில் 4 ஆயிரம் ரன்கள் கடந்த சாதனையை முறியடித்துள்ளார்.

அத்துடன் இந்தியா சார்பில் 4 ஆயிரம் ரன்களை கடந்த கேப்டன்கள் வரிசையில் நான்காவது இடத்தை பெற்றுள்ளார். தோனி (6641), அசாருதின் (5239), கங்குலி (5104) ஆகியோருக்குப் பிறகு நான்காவது வீரராக கோலி 4 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். 

முன்னதாக, இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஃபின்ச் மற்றும் காவஜாவின் சிறப்பான தொடக்கதால் ரன்களை விரைவாக குவித்தது. இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 313 ரன்கள் குவித்தது. அந்த அணியில் உஸ்மான் காவஜா 104 (113) மற்றும் கேப்டன் ஃபின்ச் 93 (99) ரன்கள் குவித்தனர். அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல்  47 (31) ரன்கள் எடுத்தர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து 314 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி விளையாடிவருகிறது. சற்று முன்னர் வரை இந்திய அணி 33 ஓவர்களில் 182 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடிவருகிறது.