விளையாட்டு

வெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி

வெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி

webteam

பங்களாதேஷ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம் இந்திய கேப்டன் விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார். 

இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, பங்களாதேஷை இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்நிலையில், இந்த இன்னிங்ஸ் வெற்றி மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனையைப் படைத்துள்ளார். அதாவது விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி பெறும் 10ஆவது இன்னிங்ஸ் வெற்றியாகும். இதன்மூலம் அதிக இன்னிங்ஸ் வெற்றிப் பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன்பு இந்தியா சார்பில் தோனி தலைமையிலான அணி 9 டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்று இருந்தது. இதனை தற்போது கோலி தலைமையிலான அணி முறியடித்துள்ளது. 

அதேசமயம், சர்வதேச அளவில் இந்தப் பட்டியலில் கோலி 7ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். சர்வதேச அளவில் 22 இன்னிங்ஸ் வெற்றியுடன் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் பட்டியலில் 300 புள்ளிகள் பெற்று இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி 60 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.