விளையாட்டு

அயர்லாந்தில் மிஸ் ஆனது இங்கிலாந்தில் நிறைவேறியது ! சாதித்த கோலி


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 9 ரன்களை எடுத்தபோது இரண்டாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.  இந்திய அணி மூன்று டி20, 5 ஒரு நாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடுவதற்கு இங்கிலாந்து சென்றுள்ளது. இதில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இந்திய அணி இங்கிலாந்து செல்வதற்கு முன்பாக அயர்லாந்து சென்று அங்கு 2 டி20 போட்டிகளில் விளையாடி வெற்றிப் பெற்றது. ஐயர்லாந்து தொடருக்கு முன் இந்திய அணி கேப்டன் விராத் கோலி டி20 போட்டியில் 1983 ரன்கள் எடுத்திருந்தார். 17 ரன்கள் எடுத்தால் 2000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார் என்ற ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் ஐயர்லாந்துக்கு எதிராக முறையே 0, 9 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார் கோலி.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 9 ரன்களை எடுத்தபோது இரண்டாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். டி-20 போட்டிகளில் இரண்டாயிரம் ரன்களை கடந்த நான்காவது வீரர் விராட் கோலி. இவர் 56 போட்டிகளில் மிக விரைவாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக மெக்கல்லம் 66 போட்டிகளிலும், கப்தில் 68 போட்டிகளிலும், சோயப் மாலிக் 92 போட்டிகளிலும் இரண்டாயிரம் ரன்களை எடுத்துள்ளனர்.