100-வது டெஸ்ட் போட்டியில் அரைசதம் தொடவில்லை என்றாலும், முன்னாள் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்து ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அந்தவகையில், இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று தொடங்கியது.
விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியப் பிறகு ரோகித் சர்மா மூன்று வடிவிலான போட்டிக்கும் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்தியா சந்திக்கும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர்.
ரோகித் 29 ரன்களில் லகிரு குமாரா பந்துவீச்சில் ஆவுட்டானார். அடுத்ததாக 33 ரன்கள் எடுத்திருந்த மயங்க் அகர்வால் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறினார். முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை சேர்த்திருந்தது. ஹனுமா விகாரியும்(30), விராட் கோலியும் (15) களத்தில் இருந்தனர்.
100-வது போட்டியில் விராட் கோலி நிச்சயம் சதம் அடிப்பார் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், விராட் கோலியோ அரைசதம் கூட அடிக்காமல் 45 ரன்கள் எடுத்தபோது எம்புல்டேனியாவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இந்தப் போட்டியில் அரைச் சதத்தை தாண்டவில்லை என்றாலும், விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அந்தவகையில், அவர் 38.2-வது ஓவரில் பெர்னாண்டோ வீசிய பந்தில் ஒரு ரன் எடுத்தபோது, டெஸ்ட் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்த 6-வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். விராட் கோலி 169 இன்னிங்சில் 8 ஆயிரம் ரன்களை கடந்துள்ளதன் மூலம், மிக குறைந்த இன்னிங்சில் 8 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர்கள்:
சச்சின் டெண்டுல்கர் - (15921)
ராகுல் டிராவிட் - (13288)
சுனில் கவாஸ்கர் - (10122)
விவிஎஸ் லக்ஷ்மண் - (8781)
விரேந்திர சேவாக் - (8586)
விராட் கோலி - (8007)
குறைந்த இன்னிங்ஸில் 8,000 ரன்கள் கடந்த இந்திய வீரர்கள்:
சச்சின் டெண்டுல்கர் – 154 இன்னிங்ஸ்
ராகுல் டிராவிட் – 157 இன்னிங்ஸ்
விரேந்திர சேவாக் – 160 இன்னிங்ஸ்
சுனில் கவாஸ்கர் – 166 இன்னிங்ஸ்
விராட் கோலி – 169 இன்னிங்ஸ்
விவிஎஸ் லக்ஷ்மண் – 201 இன்னிங்ஸ்