வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் தனது 43ஆவது சதத்தை பதிவு செய்தார். மேலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 114 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் விராட் கோலி ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது கடந்த பத்தாண்டுகளில் மட்டும் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 20ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளில் 20,018 ரன்கள் குவித்துள்ளார். இது ஒரு மிகப் பெரிய சாதனையாக அமைந்துள்ளது.
ஏனென்றால் இதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 10 ஆண்டுகளில் 18,962 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்தச் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். இந்திய சார்பில் இதற்கு முன்பு நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் 10 ஆண்டுகளில் 15.962 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. இதனையும் விராட் கோலி தகர்த்துள்ளார்.
மேலும் நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட ரன்களை 97ஆவது முறையாக அடித்துள்ளார். அத்துடன் இந்த ஆண்டில் 11ஆவது முறையாக 50க்கும் மேற்பட்ட ரன்கள் சேர்த்துள்ளார். இதன்மூலம் இந்த ஆண்டில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை ரோகித் ஷர்மாவுடன் விராட் கோலி பகிர்ந்துள்ளார்.