விளையாட்டு

“அணியில் விராட் கோலி இல்லாதது வெற்றிடத்தை உருவாக்கும்”- இயான் சேப்பல்

“அணியில் விராட் கோலி இல்லாதது வெற்றிடத்தை உருவாக்கும்”- இயான் சேப்பல்

webteam

ஆஸ்திரேலியத் தொடரில் விராட் கோலி இல்லாதது வெற்றிடத்தை உருவாக்கும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 17 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி முடிந்தவுடன் விராட் கோலி, தனது மனைவியின் பிரசவத்திற்காக இந்தியா திரும்புவார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் விராட் கோலி தாயகம் திரும்பும்போது, அது நிச்சயம் அணியில் வெற்றிடத்தை உருவாக்கும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது “ கொரோனா சூழல் காரணமாக ஆஸ்திரேலியா அட்டவணையில் உருவாகியிருக்கும் மாற்றங்கள் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக மாற வாய்ப்புள்ளது.14 நாட்கள் தனிமைப்படுத்தலில் கூட அவர்கள் பயிற்சி செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் காலம் அவர்கள் ஆஸ்திரேலியாவின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக்கொள்வதற்கான வாய்ப்பாக அமையும். பந்துவீச்சாளர்கள் மைதானத்தை துல்லியமாக கணிக்கவும், பவுன்சர் பந்துகளை பேட்ஸ்மேன்கள் திறம்பட கையாளவும் இது உதவும்.

முதல் போட்டி முடிந்தவுடன் இந்திய கேப்டன் விராட் கோலி தாயகம் திரும்புகிறார். அவர் இல்லாதது  பேட்டிங் வரிசையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே சூழ்நிலையில் இளம் வீரர்கள் தங்களை நிரூபித்துக்கொள்ள இது ஒரு வாய்ப்பாகவும் மாறும்” என்று கூறியுள்ளார்.