இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும் என்ற கேப்டன் விராத் கோலி மற்றும் தோனியின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள ‘ஏ’ கிரேட் வீரர்களுக்கு வருட சம்பளம் ரூ.2 கோடியாக வழங்கப்படுகிறது. ‘பி’ கிரேட் வீரர்களுக்கு ரூபாய் ஒரு கோடியும், ‘சி’ கிரேட் ஊழியர்களுக்கு ரூ.50 லட்சமும் வருட சம்பளமாக வழங்கப்படுகிறது. டெஸ்ட் போட்டி அணியில் உள்ள 11 வீரர்களுக்கும் ரூ.15 லட்சம் சம்பளமும், அத்துடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முறையே ரூ.6 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது. ஆனால் அணியில் இடம்பெற்றுள்ள 11 வீரர்களை தவிர்த்து மற்ற துணை வீரர்களுக்கு இதில் பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது.
எனவே சம்பளத்தை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி, முன்னாள் கேப்டன் தோனி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராயுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் கோலி மற்றும் தோனியின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய வினோத் ராய், தோனி மற்றும் கோலியுடனான பேச்சுவார்த்தை மிகவும் அருமையாக நடைபெற்றதாக கூறினார். அத்துடன் அணியில் உள்ள அனைவருடனும் தோனி மற்றும் கோலி சிறந்த உறவினை வைத்துள்ளது இந்த பேச்சுவார்த்தையின் மூலம் தெரியவந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அவர்களின் கோரிக்கை ஏற்கப்படும் என்றும், அதன்படி புதிய சம்பளப் பட்டியல் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.