விளையாட்டு

அதிவேகமாக 20ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி புதிய சாதனை 

அதிவேகமாக 20ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி புதிய சாதனை 

webteam

சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 20ஆயிரம் ரன்களை கடந்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 

இந்திய கேப்டன் விராட் கோலி ரெகார்டுகளை தகர்த்து புதிய சாதனை படைப்பதில் பேர் போனவர். அந்தவகையில் இவர் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனையை முறியடித்து வருகிறார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அதிவேகமாக ஒருநாள் போட்டியில் 11ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சச்சினின் சாதனையை தகர்த்தார்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் விராட் கோலி 37 ரன்கள் எடுத்தன் மூலம் சர்வேதச கிரிக்கெட்டில் 20ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். அத்துடன் இந்தச் சாதனையை குறைந்த இன்னிங்ஸில் அடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

ஏனென்றால் இதற்கு முன்பு 20ஆயிரம் சர்வதேச ரன்களை இந்தியாவின் சச்சின் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் லாரா ஆகிய இருவரும் 453ஆவது இன்னிங்ஸில் கடந்ததே சாதனையாக இருந்தது. இச்சாதனையை விராட் கோலி 417 இன்னிங்ஸில் அடித்து புதிய சாதனைப் படைத்துள்ளார். அதாவது விராட் கோலி இதுவரை 131 டெஸ்ட் போட்டி, 224 ஒருநாள் போட்டி, 62 டி20 போட்டி என மொத்தமாக 417 இன்னிங்ஸில் விளையாடியுள்ளார். 

ஏற்கெனவே இந்தியா சார்பில் சச்சின் டெண்டுல்கர் (34,357 ரன்கள்), ராகுல் திராவிட்(24,208 ரன்கள்) என இருவரும் 20 ஆயிரம் சர்வதேச ரன்களை கடந்துள்ளனர். உலகளவில் 11 பேர் இச்சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.