விளையாட்டு

விராத் கோலி - கும்ப்ளே மோதல்: டைம்லைன்

விராத் கோலி - கும்ப்ளே மோதல்: டைம்லைன்

webteam

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே கடந்த 20ம் தேதி பதவி விலகினார்.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியைத் தழுவிய 2ஆவது நாளில் இந்த அறிவிப்பை கும்ப்ளே வெளியிட்டது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது. இந்திய அணியின் பயிற்சியாளராக கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 23ல் அனில் கும்ப்ளே ஒப்பந்தம் செய்யப்பட்டார். சமீபத்தில் முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரை அவர் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், புதிய பயிற்சியாளரை நியமிக்கும்வரை பயிற்சியாளர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், பிசிசிஐ வேண்டுகோளை ஏற்க கும்ப்ளே மறுத்துவிட்டார். கேப்டன் விராத் கோலியுடனான கருத்து வேறுபாடே கும்ப்ளே பதவி விலக காரணம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், கும்ப்ளே-கோலி இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரச்னை கடந்துவந்த பாதையைப் பார்க்கலாம்.

மே 30: சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொள்ள 5 நாட்களே இருந்த நிலையில், கும்ப்ளே - கோலி இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

மே 31: கும்ப்ளேவின் ஒப்பந்தகாலம் முடிவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்தது. பயிற்சியாளர் பதவிக்கு டாம் மூடி, வீரேந்திர சேவாக், ரிச்சர்டு பைபஸ் உள்ளிட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

ஜூன் 1: கும்ப்ளே - கோலி இடையில் எந்தவித பிரச்னையுமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளார் பொறுப்பு வகிக்கும் அமிதாப் சவுத்ரி கூறினார்.

ஜூன் 3: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, பயிற்சியாளர் கும்ப்ளேவுடன் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறினார்.

ஜூன் 12: வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடியும்வரை இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவே நீடிப்பார் என்று பிசிசிஐ நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய் அறிவித்தார். ஆனால், கும்ப்ளேவின் விருப்பத்தைப் பொறுத்து இந்த முடிவு மாறுபடலாம் என்றும் அவர் கூறினார்.

ஜூன் 13: தங்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து சுமூகமாகவும், ஒற்றுமையாகவும் செயல்பட கும்ப்ளே மற்றும் கோலி ஆகிய இருவருமே ஒப்புக்கொண்டதாக சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு தெரிவித்தது.

ஜூன் 15:  பயிற்சியாளர் விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் ஆலோசனைக் குழு மற்றும் பிசிசிஐ நிர்வாகத்திடம் கேப்டன் விராத் கோலி விளக்கமளிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

ஜூன் 17: அனில் கும்ப்ளேவின் செயல்பாடுகள் குறித்து லண்டனில் நடந்த கிரிக்கெட் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விராத்கோலி அதிருப்தி தெரிவித்ததாக கூறப்பட்டது.

ஜூன் 20: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியுடன் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே செல்லவில்லை என்று தகவல்கள் வெளியாகின. லண்டனில் ஜூன் 22 மற்றும் ஜூன் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் பங்கேற்பதால் கும்ப்ளே வெஸ்ட் இண்டீஸ் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அன்று மாலையிலேயே, பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அனில் கும்ப்ளே அறிவித்தார்.