இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் டெல்லியில் நடந்து வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பெவிலியன் திரும்பிய விராட் கோலி தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிடிடம் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்த போது சாப்பாடு வந்துவிட்டதாக ஒருவர் வந்து சொல்ல உடனே குதூகலமாகியிருக்கிறார் விராட்.
இந்த நிகழ்வின் வெறும் எட்டே நொடிகள் கொண்ட வீடியோதான் தற்போது ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் படு வைரலாகி வருகிறது. டெல்லியின் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்று சோலே பட்டுரே. சோலா பூரி என்றும் கூறுவார்கள். விராட்டும் டெல்லியைச் சேர்ந்தவர் என்பதால் சோலே பட்டுரேவை பிடிக்காமல் போக வாய்ப்பிருக்காது.
இந்த நிலையில்தான் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய விராட் டிராவிடிடம் தீவிரமாக பேசிக் கொண்டிருந்த போது உணவு பார்சலுடன் வந்தவர், சாப்பாடு வந்துவிட்டது எனச் சொல்ல ஒரு நொடி பேச்சை நிறுத்திவிட்டு கையை தட்டி வந்துட்றேன் என விராட் கூறுவதும், அதனை அருகே இருந்த டிராவிட் பார்த்து சிரிக்கும் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது.
இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் அதனை பகிர்ந்ததோடு விராட் கோலியையும் சோலே பட்டுரேவையும் இணைத்து கிண்டலாகவும் பதிவிட்டு வருகிறார்கள். அதில், “சோலே பட்டுரே வந்ததும் எப்படி பெரும்பாலான டெல்லிவாசிகளின் உணர்வுகள் இருக்குமோ அப்படிதான் விராட்டின் 99.9% ரியாக்ஷனும் இருக்கிறது” என்றும், “டெல்லியின் சோலே பட்டுரே மீதான அவரது உணர்வு அளவில்லாதது” என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.