வினோத் காம்ப்ளி எக்ஸ் தளம்
விளையாட்டு

‘நான் நலமுடன் இருக்கிறேன்’ - உடல்நலம் குறித்து வைரலான பழைய வீடியோ.. பதிலளித்த வினோத் காம்ப்ளி!

தாம் நலமுடன் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரமான வினோத் காம்ப்ளி தெரிவித்துள்ளார்.

Prakash J

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1084 ரன்கள் எடுத்துள்ளார். 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 2477 ரன்கள் எடுத்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வினோத் காம்ப்ளியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலானது.

Vinod kambli

அந்த வீடியோவில், காம்ப்ளியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததுடன், அவரால் சரியாக நிற்கக்கூட முடியவில்லை என்பதையும் அந்த வீடியோ பதிவுகள் காட்டின. இதையடுத்து, காம்ப்ளியின் இத்தகைய நிலையைக் கண்டு, ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்து, அவருக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் வினோத் காம்ப்ளி தனது வைரலான வீடியோ குறித்து, "நான் நன்றாக இருக்கிறேன், சமூக ஊடகங்களை நம்ப வேண்டாம். களத்தில் இறங்கி பேட்டிங் செய்யும் அளவுக்கு, நான் இன்னும் உடற்தகுதியுடன் இருக்கிறேன்" என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து காம்ப்ளியின் நண்பர் மார்கஸ், "நாங்கள் அவரை சந்தித்தபோது, அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவர் குணமடைந்து வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் நன்றாக உள்ளது. வைரலாகி வரும் காணொளி பழையது" என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் வினோத் காம்ப்ளி தற்சமயம் நலமுடன் இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.