மோடி, வினேஷ் போகத் ani
விளையாட்டு

ஒலிம்பிக் சர்ச்சையின்போது அழைத்த பிரதமர்.. ஏற்க மறுத்த வினேஷ் போகத்.. நேர்காணலில் அவரே சொன்ன உண்மை!

பிரதமர் மோடியின் அழைப்பினை, தாம் ஏற்க மறுத்ததாக வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.

Prakash J

சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால், இதற்கு முன்பாகவே மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வுபெற்ற காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது ஹரியானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வினேஷ் போகத் ஜூலானா தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னதாக, இந்திய ரயில்வேவில் வடக்கு ரயில்வே சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றி வந்த பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் அழைப்பினை, தாம் ஏற்க மறுத்ததாக வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்திருக்கும் நேர்காணல் ஒன்றில், “பிரதமர் மோடியிடம் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் அது நேரடியாக அவரிடமிருந்து அழைப்பு வரவில்லை. இந்திய அதிகாரிகள் பிரதமர் மோடி என்னிடம் பேச விரும்புவதாகக் கூறினார்கள். நானும் தயாராக இருந்தேன். ஆனால், அவர்கள் சில நிபந்தனைகளை விதித்தார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இறந்தவர்களின் சாம்பல்.. எஞ்சும் உலோகங்கள்.. ரூ.377 கோடி வருமானம் ஈட்டும் ஜப்பான்!

தொடர்ந்து அவர், “அதில், என்னுடைய அணியினர் யாரும் அருகில் இருக்கக்கூடாது. பிரதமரின் சார்பில் இரண்டு நபர்கள் நாங்கள் பேசுவதை பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட இருப்பதாகக் கூறினார்கள். நான் எனது கடின உழைப்பையும் உணர்ச்சிகளையும் சமூக வலைதளங்களில் கிண்டல்களுக்கு உள்ளாக்க விரும்பவில்லை. பிரதமர் மோடி நிஜமான அக்கறையுடன் அழைத்திருந்தால் நான் நிச்சயமாகப் பேசியிருப்பேன்.

அவருக்கு விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகள் மீது உண்மையான அக்கறை இருந்தால் வீடியோ பதிவு செய்யாமலேயே அழைத்திருப்பார். ஒருவேளை அவர் பேசுவதாக இருந்தால் நான் கடந்த 2 வருட விஷயங்கள் குறித்து கேட்பேன் என அவருக்குத் தெரிந்திருக்கும். அப்படி நான் பேசுவதை அவர்கள் அவர்களுக்கேற்றபடி எடிட் செய்யக்கூடும். அந்த இடத்தில் நான் வீடியோ எடுத்தால், அந்த முழு வீடியோவை நான் சமூக வலைதளத்தில் பதிவிட்டுவிடுவேன் என நினைத்து, நான் செல்போன் வைத்துக்கொள்ள அவர்கள் அனுமதி வழங்கவில்லை. இவற்றை நான் புரிந்துகொண்டதாலேயே அவர்கள் என்னைப் பேச அனுமதிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஈரான் வீசிய ஏவுகணைகள்... தப்பிக்க ஓடினாரா இஸ்ரேல் பிரதமர்? வைரல் வீடியோ.. உண்மை என்ன?