இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் வினய்குமார் (37) சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 31 ஒரு நாள் போட்டி, ஒன்பது டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் வினய் குமார். இதில் மொத்தம் 49 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதுதவிர முதல் தர கிரிக்கெட்டில் 139 போட்டிகளில் விளையாடி 504 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 32 ரன்களைக் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவருடைய சிறந்த பந்துவீச்சாகும்.
வினய் குமார் 2004-2005 சீசனில் ரஞ்சி கிரிக்கெட்டில் அறிமுகமானார். மேலும் 2007 - 2008, 2009-2010 ரஞ்சி கிரிக்கெட் சீசனில் சிறப்பாக பந்துவீசியதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். வினய் குமார் தலைமையிலான கா்நாடக அணி, 2013-2014, 2014-2015 சீசனில் ரஞ்சி கோப்பையை வென்று சாதனையும் படைத்தது.
இந்நிலையில் வினய் குமார் வெள்ளிக்கிழமை தன்னுடைய ஓய்வை அறிவித்தார், இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் "மறக்க முடியாத பல்வேறு நினைவுகளுடன் சா்வதேச கிரிக்கெட்டிலிருந்தும், முதல் தர கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன். ஓய்வு பெறுவது என்பது எளிதானதல்ல. எனினும் ஒவ்வொரு விளையாட்டு வீரரும் என்றாவது ஒரு நாள் ஓய்வு பெற்றே ஆக வேண்டும். அனில் கும்ப்ளே, ராகுல் திராவிட், மகேந்திர சிங் தோனி, சேவாக், கௌதம் கம்பீர் , விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சா்மா ஆகியோருடன் இணைந்து விளையாடியது பெருமைக்குரிய தருணங்களாகும்"
"மும்பை இண்டியன்ஸ் அணிக்காக விளையாடியபோது, சச்சின் டெண்டுல்கர் ஆலோசகராக இருந்தார். அவரிடம் இருந்து கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. இந்திய அணிக்காக சா்வதேச கிரிக்கெட்டில் விளையாடியது எனது அதிர்ஷ்டமாகும். எனது கிரிக்கெட் பயணம் ஏராளமான மறக்க முடியாத நினைவுகளைக் கொண்டதாகும். அது என் வாழ்நாள் முழுவதும் என்னை விட்டு அகலாது. கிரிக்கெட் கனவுகளோடு தேவாங்கரில் இருந்து பெங்களூருக்கு வந்தேன்"
"கர்நாடக அணிக்காக விளையாடும் வாய்ப்பை எனக்களித்த கா்நாடக கிரிக்கெட் சங்கத்துக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். கா்நாடக கிரிக்கெட்டிலிருந்து இந்திய அணியில் இடம்பிடித்தேன். இந்த நேரத்தில் பிசிசிஐக்கும், ஐபிஎல் நிர்வாகத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணியின் ஜொ்ஸியை அணிந்து விளையாடிய நினைவுகள் எப்போதும் எனது இதயத்தை விட்டு நீங்காது" என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார் வினய் குமார்.