விளையாட்டு

விழுப்புரம்: மீன் குட்டையாக மாறிய மாவட்ட அரசு விளையாட்டு அரங்கம் – மக்கள் வேதனை

Veeramani

விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்குள் மீன் குட்டைகள் அமைத்து மீன் வளர்த்து வருவதாக மாவட்ட விளையாட்டு அதிகாரி மீது பொதுமக்கள்  மற்றும் முன்னாள் விளையாட்டு வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு அதிகாரியின் தலைமையில் இயங்கும் ஒரு மாவட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் விடுதி ஒன்று மொத்தம் 60 விளையாட்டு வீரர்களை கொண்டு இயங்கும் விதமாக தொடங்கப்பட்டது. தற்போது அந்த விடுதியில் 19 விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் கைப்பந்து மற்றும் கபடி போட்டிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சிகள் வழங்கப்படாத நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டப்பின்னர் 19 மாணவர்களுக்கு மட்டும் கைப்பந்து பயிற்சி வழங்கப்படுவதாக மாவட்ட விளையாட்டு துறையினர் தெரிவிக்கின்றனர்.

மதுரை, தஞ்சை, திருச்சி, அரியலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் தற்போது இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக ஒரு மாணவர் கூட விழுப்புரத்திலிருந்து விளையாட்டு பயிற்சிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதற்கு காரணம் பள்ளியில் மாணவர்களை விளையாட்டு பயிற்சியாளர்கள் ஊக்குவிக்கவில்லை என்பதே ஆகும். இந்த நிலையில் தொற்று காரணமாக பயிற்சிகள் எதுவும் நடைபெறாத இந்த நேரத்தில் மாவட்ட விளையாட்டு அதிகாரி மற்றும் அலுவலர்கள் சார்பில் விளையாட்டு அரங்கத்தில்  இரண்டு மிகப்பெரிய மீன் குட்டைகள் வெட்டப்பட்டு மீன் வளர்க்கப்பட்டு வருகிறது. அதற்காக எந்த அரசு ஆணையும் இல்லை என்பது வேதனையான தகவலாக இருந்தாலும் கூட, அரசு பணத்தில் மீன் குட்டைகளை உருவாக்கி மீன் வளர்த்து வருவதாக மாவட்ட விளையாட்டு அதிகாரி மீது பொதுமக்களும் பயிற்சி வீரர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு மாவட்ட விளையாட்டு அரங்கத்தை திறக்கவும், பயிற்சி மைதானங்களை சீர் செய்யவும் வேண்டும் என்கின்றனர் முன்னாள் விளையாட்டு வீரர்களும், சமூக ஆர்வலர்களும். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் வேல்முருகனை தொடர்பு கொண்டு கேட்டபோது அரசு ஆணை வந்தவுடன் விளையாட்டு அரங்கம் திறக்கப்படும் என்றார். மேலும், விளையாட்டு அரங்கத்தை திறந்தால் பயிற்சி அளிப்பதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் நீச்சல் குளம், வாலிபால், ஃபுட்பால், ஓட்டப்பந்தயம் மற்றும் கூடைப்பந்து கைப்பந்து, கபடி என அனைத்து விளையாட்டு பயிற்சி இடங்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

-ஜோதி நரசிம்மன்