மாரியப்பன் தங்கவேலு pt desk
விளையாட்டு

3 பாரா ஒலிம்பிக்ஸ்... 3 பதக்கங்கள்... மாரியப்பன் தங்கவேலு சாதனையை கொண்டாடி மகிழும் கிராம மக்கள்!

webteam

செய்தியாளர்: தங்கராஜூ

பாரிஸ் பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் விளையாட்டுப போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், ஆண்களுக்கான டி-63 உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது.

மாரியப்பன் தங்கவேலு

இதில், இந்தியாவிலிருந்து தமிழக வீரர் மாரியப்பன், ஷரத்குமார், சைலேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களில் 1.88 மீட்டர் உயரம் தாண்டி ஷரத்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்த்த மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார். அமெரிக்காவின் ஃப்ரெச் எஸ்ரா 1.94 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.

முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு பாரா ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். தொடர்ந்து 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனையடுத்து தற்போது பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

ஒரு வீரர் தொடர்ந்து 3 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி தொடர்ந்து தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கம் வென்று மாபெரும் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை மாரியப்பனின் சொந்த ஊரான பெரியவடகம்பட்டி கிராமத்து மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

பட்டாசு வெடித்து கொண்டாடிய பெரியவடகம்பட்டி கிராமத்து மக்கள்

மேலும், பிறந்த மண்ணுக்கும், பிறந்த நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். தொடர்ந்து கிராமமும், அவர் படித்த பள்ளியும் ஹாட்ரிக் பதக்கம் வென்றதை கொண்டாடி வருகின்றனர்.