விளையாட்டு

"எங்க.. அக்கவுண்ட்டில் இருந்த பணத்த காணோம்” - உசைன் போல்ட்டின் கோடிக்கணக்கான பணம் மோசடி!

"எங்க.. அக்கவுண்ட்டில் இருந்த பணத்த காணோம்” - உசைன் போல்ட்டின் கோடிக்கணக்கான பணம் மோசடி!

webteam

ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்டின் கோடிக்கணக்கான பணம் காணாமல் போயிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதிவேக ஓட்டப்பந்தய வீரராக உலகமறியப்படுபவர் ஜமைக்காவைச் சேர்ந்த உசேன் போல்ட். இவர், தொடர்ந்து ஒலிம்பிக்கில் தங்கத்தை வேட்டையாடியவர். 2017ஆம் ஆண்டுடன் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற அவர், தற்போது விளம்பரத் தூதுவராகச் செயல்பட்டு வருகிறார். இதன்மூலம் கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வருகிறார்.

இந்த நிலையில், உசைன் போல்ட் பயன்படுத்தி வந்த முதலீட்டுக் கணக்கிலிருந்து பல மில்லியன் டாலர் காணாமல் போயிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஜமைக்காவில் ஸ்டாக்ஸ் அண்ட் செக்யூரிட்டி லிமிடெட் (எஸ்.எஸ்.எல்.) என்ற நிறுவனத்தில், உசைன் போல்ட் முதலீடு செய்து வந்துள்ளார். இதில் தற்போது 12,000 டாலர் மட்டுமே மீதி இருப்பதாகவும், 12.8 மில்லியன் டாலர்கள் காணாமல் போயிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து உசைன் போல்ட்டின் வழக்கறிஞர், “இதுபோன்ற சம்பவம், இத்தனை வருடத்தில் தற்போதுதான் முதல்முறையாக நடைபெற்றுள்ளது. அவர் தற்போது இழந்திருக்கும் தொகை அவருடைய வாழ்நாள் சேமிப்பாகும். அவரது வங்கிக் கணக்கில் 12,000 டாலர் மட்டுமே மீதி உள்ளது. நிறுவனம் அவருடைய நிதியைத் திருப்பித் தராவிட்டால், நாங்கள் இந்த விஷயத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வோம். உசைன் போல்ட் தன்னுடைய பணத்தை மீட்டு நிம்மதியாக வாழும் வகையில், இவ்விவகாரத்துக்குத் தீர்வு காணப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

அதேநேரத்தில் ஜமைக்காவின் கிங்ஸ்டனை தளமாகக் கொண்ட ஸ்டாக்ஸ் அண்ட் செக்யூரிட்டிஸ் லிமிடெட், கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ”தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவரின் மோசடி நடவடிக்கைதான் இது. இந்த விவகாரம் தொடர்பாக சட்ட அமலாக்க நிறுவனத்தில் புகார் அளித்துள்ளோம்.

அந்த ஊழியரின் மோசடியால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து சொத்துகளைப் பாதுகாக்கவும், நெறிமுறைகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளது. இந்த மோசடி சம்பவத்தில் உசைன் போல்ட்டின் கணக்கும் பாதிக்கப்பட்டிருப்பதுடன், இதில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தது. இதுதொடர்பாக நாட்டின் நிதிப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.

- ஜெ.பிரகாஷ்