இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது. பிசிசிஐ தலையிட்டதை அடுத்து அவருக்கு விசா வழங்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு, டி-20 போட்டி, அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்களுக்கு அமெரிக்க செல்வதற்காக, விசாவுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் அவருக்கு விசா வழங்க அமெரிக்க தூதரகம் மறுத்துவிட்டது.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம், அவருக்கு விசா வழங்குமாறு அமெரிக்க தூதரகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியது. அதில், ஷமி, இந்தியாவுக்காக படைத்துள்ள சாதனைகள் மற்றும் அவர் மீது உள்ள வழக்கு குறித்த விளக்கம் ஆகியவற்றை தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது. அந்த விளக்கத்தை ஏற்று அமெரிக்க தூதரகம் ஷமிக்கு விசா வழங்க அனுமதியளித்தது.
முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு முகமது ஷமி மற்றும் அவரது மனைவி ஜஹானுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. ஷமி மீது அவர் மனைவி ஜஹான் கொடுமைப் படுத்துவதாக புகார் அளித்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.