விளையாட்டு

இறுதிப் போட்டி ஓவர் த்ரோ முடிவு தவறாகிவிட்டது குமார் தர்மசேனா

இறுதிப் போட்டி ஓவர் த்ரோ முடிவு தவறாகிவிட்டது குமார் தர்மசேனா

webteam

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஓவர் த்ரோ முடிவு தவறாக எடுக்கப்பட்டது என்று அந்தப் போட்டியின் நடுவரான குமார் தர்மசேனா ஒப்புக்கொண்டுள்ளார். 

உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் போட்டியில் 242 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. பவுல்ட் வீசிய அந்த ஓவரின் நான்காவது பந்தினை அடித்துவிட்டு இரண்டு ரன்கள் ஓட முயன்றார். பீல்டிங் செய்த குப்தில் பந்தை பிடித்து விக்கெட் கீப்பரிடம் வீசினார். ஆனால், ஸ்டம்பை நோக்கி வந்த பந்து ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு, அங்கிருந்து பவுண்டரியை எல்லைக் கோட்டை சென்றடைந்தது. அதனால், ஓடி எடுத்த இரண்டு ரன்களுடன், ஓவர் த்ரோ மூலமாக 4 நான்கு ரன்கள் கூடுதலாக இங்கிலாந்து அணிக்கு கிடைத்தது. ஆகவே இந்த ஓவர் த்ரோ முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடுவராக இருந்த இலங்கையைச் சேர்ந்த குமார் தர்மசேனா கருத்து தெரிவித்துள்ளார். அதில்,“நான் இப்போது டிவியில் இந்தப் போட்டியை திரும்பி பார்க்கும் போது நான் செய்த தவறை அறிந்துக் கொண்டேன். இந்த விவகாரத்தில் அப்போது எங்களால் டிவி ரீப்ளே பார்க்கமுடியாது. எனவே நான் களத்திலிருந்த மற்றொரு நடுவரிடம் ஆலோசனை நடத்தினேன்.

அதன்பிறகு தான் 6 ரன்கள் வழங்கினேன். நாங்கள் பேட்ஸ்மேன் இருவரும் இரண்டாவது ரன்னை முடித்தனர் என்று நினைத்தாலேயே இந்த முடிவை எடுத்தோம். இந்த விவகாரத்தில் ரீப்ளேவை பார்க்காததால் நாங்கள் எடுத்த முடிவு குறித்து நான் வருத்தப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக இந்த விவகாரத்தில் அனுபவம் வாய்ந்த முன்னாள் கிரிக்கெட் நடுவர் சைமன் டபிள், அந்த ஓவர் த்ரோவிற்கு 5 ரன்கள் மட்டுமே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதாவது, ஐசிசி விதிகளின்படி, பீல்டர் பந்தினை எறிவதற்கு முற்பாக பேட்ஸ்மேன்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்து இருக்க வேண்டும். ஆனால், அன்று பேட்ஸ்மேன்கள் கடக்கவில்லை. அதனால், அந்த ஒரு ரன் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.