ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நாளை தொடங்குகிறது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான வீரர்கள் பங்கேற்கும் ஜூனியர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி, 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா, நியூசிலாந்தில் நாளை தொடங்கி பிப்ரவரி 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் கென்யா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் ‘பி’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே, ‘சி’ பிரிவில் பங்களாதேஷ், கனடா, இங்கிலாந்து, நமிபியா, ‘டி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய அணிக்கு மும்பையைச் சேர்ந்த பிருத்வி ஷா கேப்டனாக உள்ளார். ராகுல் டிராவிட் பயிற்சியாளர். இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. மூன்று முறை சாம்பியனான இந்திய அணி, இந்தப் போட்டியிலும் சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் நேற்றைய பயிற்சி ஆட்டம் மழையால் பாதிகப்பட்டது. ஜூனியர் உலக்கோப்பை கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் அனைவரும் நேற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.