ஆந்திரம் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர் ஓய்வு நேரத்தில் நண்பர்களுடன் சீட்டு விளையாடியதால் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 26 ஆயிரம் பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் 1061 கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 31 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த பாதிப்புகளை கட்டுப்படுத்த பிரதமர் மோடி மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளார். ஆனால் நாட்டின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவும் மீறப்படுகிறது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா பாதித்த லாரி ஓட்டுநர் ஒருவர், ஊரடங்கு உத்தரவை மீறி நண்பர்களுடன் பொழுது போக்குவதற்காக சீட்டு விளையாடியுள்ளார். இதன் காரணமாக அவருடன் தொடர்பில் இருந்த 24 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக விஜயவாடா மாவட்ட ஆட்சியர் இம்தியாஸ் தெரிவித்துள்ளார்.
இதேபோல அதே மாவட்டத்தில் இன்னொரு லாரி ஓட்டுநரால் 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற அலட்சியம் காரணமாக ஒரே பகுதியில் 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கவலை தெரிவித்துள்ள இம்தியாஸ் "தனிமனித இடைவெளியை முறையாக கடைப்பிடிக்காததும், இதுபோன்ற வைரஸ் பரவ காரணமாக இருக்கிறது. இதனால் விஜயவாடாவில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார் அவர்.