விளையாட்டு

உலகக் கோப்பை வென்ற இங். பயிற்சியாளரை நியமித்தது ஹைதராபாத் அணி

rajakannan

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து அணிக்கு உலகக் கோப்பை வென்று கொடுத்த டிரெவொர் பேலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடர்களில் 2013 ஆம் ஆண்டு முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது. அந்த அணி 2016 ஆம் ஆண்டு கோப்பையை கைப்பற்றியது. 2018 ஆம் ஆண்டி இறுதிப் போட்டி வரை சென்றது. டேவிட் வார்னர், ஷிகர் தவான், யுவராஜ் சிங் உள்ளிட்ட வீரர்கள் அந்த அணிக்காக விளையாடியுள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி அந்த அணிக்கு பல ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்த ட்ரெவொர் பேலிஸ் சன்ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், “டிரெவொர் பேலிஸ் ஏற்கெனவே கொல்கத்தா அணிக்காக 2 முறை கோப்பையை கைப்பற்றியிருக்கிறார். அதேபோல், சிட்னி சிக்ஸர் அணிக்காக பிக் பாஷ் லீக் மற்றும் சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார்.

எங்களது அணியை 7 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றதோடு, 2016இல் கோப்பையை வெல்ல வைத்த டாம் மூடிக்கு நன்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.