விளையாட்டு

பானி பூரி விற்று கிரிக்கெட் பயிற்சி: ஐபிஎல் ஏலத்தில் கவனம் ஈர்த்த யாஷாஸ்வி!

பானி பூரி விற்று கிரிக்கெட் பயிற்சி: ஐபிஎல் ஏலத்தில் கவனம் ஈர்த்த யாஷாஸ்வி!

webteam

விடா முயற்சியுடன் தொடர்ந்து உழைத்தால் எண்ணிய உயரம் அடையலாம் என்பதற்கு இலக்கணமாய் இருக்கிறார் 17 வயதான இந்திய இளம் கிரிக்கெட் வீரர் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால். இவர், சிறுவயதில் உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து மும்பைக்கு வந்தபின், வசிக்க வீடில்லாமல் தவித்து வந்துள்ளார். அங்கு, ஆசாத் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுபவர்களை கண்டு ஏக்கம் அடைந்த இவர், புகழ்பெற்ற சச்சின் டெண்டுல்கர் போல் ஆக வேண்டும் என்கிற லட்சியத்தை மனதில் வளர்த்துக் கொண்டார். ஆனால், இவருடன் இருந்ததோ வறுமை மட்டும்தான்.

அப்போது, அயராது கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்ட இவர், மைதானத்தின் அருகேயுள்ள முகாமில் தான் தங்கியிருந்தார். மழைக்காலங்களில் வெள்ளத்தின் அடைக்கலமாக முகாம்கள் மாறும் எனவும், அதுவே கோடைக்காலத்தில் வெந்து தணிக்கும் இடமாக இருக்கும் எனவும் கூறுகிறார் ஜெய்ஸ்வால். ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்பட்ட இவர், பானி பூரி கடை ஒன்றில் வேலை‌ பார்த்துள்ளார். அங்கு, தன்னுடன் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ளும் பலரும் பானி பூரி சாப்பிட வரும் போது, வறுமையின் கொடுமையை உணர்ந்ததாகக் கூறுகிறார்.

ஜெய்ஸ்வாலின் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியது இவரின் பயிற்சியாளரும், காப்பாளருமான ஜ்வாலா சிங் என்பவ‌ர். ஜெய்ஸ்வால் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ள அனைத்துச் செலவுகளையும் ஏற்ற பயிற்சியாளர், தனது வீட்டிலேயே இவரை தங்கவும் வைத்துள்ளார்.

விடா முயற்சியும், அயராத பயிற்சியும் மேற்கொண்ட ஜெய்ஸ்வால், விஜய் ஹசாரே தொடரில் விளையாடும் மும்பை அணியில் இடம்பிடித்தார். ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில், இரட்டை சதம் விளாசி மிரள வைத்தார். இதன்மூலம், முதல் தரப்போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால், இளையோர் உலகக்கோப்பை இந்திய அணியிலும் இடம்பிடித்துவிட்டார்.

இதனிடையே, கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், ஜெ‌ய்ஸ்வாலை ராஜஸ்தான் அணி 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலமெடுத்தது. பிறந்ததிலிருந்து வறுமையை‌ மட்டுமே அறிந்திருந்த இவர், கோடிகளின் கையில் தவழத் தொடங்கியுள்ளார். ஐபிஎல் ஏலத்தொகையை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? எனக் கேட்டபோது, தனக்கு வாழ்க்கை அளித்த பயிற்சியாளருக்கே அந்த ஒட்டுமொத்த தொகையையும் தரப்போவதாகக் கூறியுள்ளார்.