கிரிக்கெட் வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் வெளிநாட்டு போட்டிகளுக்கு வருவது தொந்தரவாக இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களில் சிலர் வெளிநாட்டு போட்டிகளுக்கு செல்லும் போது தங்கள் குடும்பத்தினரையும் உடன் அழைத்துச்செல்கின்றனர். ஆனால் வீரர்கள் குடும்பத்துடன் வெளிநாட்டு போட்டிகளுக்கு வருவது நடைமுறைச்சிக்கல்களை உண்டாக்குவதாக பிசிசிஐ வருத்தம் தெரிவித்துள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பிசிசிஐ பல சிக்கல்களை சந்தித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அனைவருக்கும் பாதுகாப்பு அளித்தல், பேருந்து வசதி ஏற்படுத்துதல், தங்கும் இடம், உணவு வசதிகள் என அனைத்து வகையிலும் பிசிசிஐக்கு நடைமுறை சிக்கல்கள் உண்டானதாக கூறப்படுகிறது. இரண்டு பேருந்துகள் பயன்படுத்திய நிலையிலும் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் முதல் 10 நாட்கள் வீரர்களுடன் அவர்களின் மனைவி இருக்கலாம் என்றும் அதற்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க குறிப்பிட்ட காலக் கட்டத்தை வழங்குவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
தன்னுடைய மனைவியான அனுஷ்காவை வெளிநாடுகளுக்கு உடன் அழைத்துச் செல்ல விராட் கோலி அனுமதி கோரியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ , வீரர்களே அவரவர் குடும்பத்தினருக்கு செலவு செய்வதால் தங்களுக்கு செலவு இல்லை என்றும், ஆனால் அவர்களுக்கான பாதுகாப்பு, இடவசதி உள்ளிட்ட மற்ற வகைகளில் தொந்தரவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ அதிகாரி, கிரிக்கெட் வீரர்கள் ஒரு சிலருடன் வெளிநாடுகளுக்கு வந்தால் அவர்களுக்கான ஏற்பாடுகளை பிசிசிஐ எளிதாக செய்துவிடும் என்றும், ஆனால் அதிக எண்ணிக்கையில் வரும்போது நடைமுறைச்சிக்கல்களை சமாளிக்க வேண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை குறிப்பிட்டு பிசிசிஐ தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. வீரர்களுடன் வருபவர்களுக்கு மைதானத்தில் பாதுகாப்பான இடம் கொடுப்பது கூட பிரச்னை தான் என்றும் இந்த விவகாரத்தில் தாங்கள் பணத்தை முன்னிறுத்தவில்லை என்றும், பாதுகாப்பு விவகாரங்களே சவாலாக இருப்பதாகவும் பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.