விளையாட்டு

ஐபிஎல் மினி ஏலத்தில் விலைபோகாத 5 முக்கிய வீரர்கள் - யார் அவர்கள்?

ஐபிஎல் மினி ஏலத்தில் விலைபோகாத 5 முக்கிய வீரர்கள் - யார் அவர்கள்?

webteam

கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் கண்டுகொள்ளப்படாத 5 முக்கிய வீரர்கள்!

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம், கேரள மாநிலம் கொச்சியில் டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பாராத வகையில், பலத்த போட்டிகளுக்கு இடையே இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரனை ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. இதேபோல், ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டரான கேமரூன் கிரீனை, ரூ.17.5 கோடிக்கு மும்பை அணி ஏலத்தில் எடுத்தது. இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரும், டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனுமான பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை அணி தக்கவைத்தது. இப்படி சில வீரர்கள் போட்டி போட்டி வாங்கப்பட்டாலும் முக்கியமான சில வீரர்களை சீண்டவே ஆள் இல்லாத நிலையும் இருந்தது. அப்படி, ஏலம் போகாத முக்கியமான வீரர்கள் சிலரைப் பற்றி இங்கு நாம் காணலாம்.

1. டேவிட் மாலன்

இங்கிலாந்து வீரரான டேவிட் மாலன் ஆரம்ப காலத்தில் டி20 சர்வதேச போட்டிகளில் முதலிடத்தில் இருந்து வந்தார். அதிரடியாக ரன்களை குவித்த இவர், எதிரணி வீரர்களுக்கு தன்னுடைய அதிரடியால் கிளிபிடிக்கவும் வைத்தார். டி20-யை பொறுத்தவரை 55 போட்டிகளில் விளையாடி 1748 ரன்களை குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 38.84. ஆனால், இன்றோ ஐபிஎல் மினி ஏலத்தில் அவரை எடுக்கவே ஆள் இல்லை. சர்வதேச போட்டிகளில் இவரது இறங்கு முகம் காரணமாக இவருக்கு ஐபிஎல் செட் ஆகவில்லை. கடந்த முறைதான் ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். பஞ்சாப் அணிக்காக கடந்த முறை 1.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இவர், ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடி 26 ரன்கள் எடுத்தார். இந்தநிலையில் அவரை இந்த முறை யாரும் ஏலம் கேட்கவில்லை.

2. டேரி மிட்சல்

நியூசிலாந்து வீரர் டேரி மிட்செல் டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக சிறப்பாக விளையாடி வந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இவரை மினி ஏலத்தில் யாரும் கேட்கவில்லை. முதல் முறையாக 2022 ஐபிஎல் சீசனில் விளையாடியிருந்தார். 2 போட்டிகளில் வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

3. முஜீப் உர் ரஹ்மான்

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 21 வயது இளம் வீரரான முஜீப் உர் ரஹ்மான், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு ரவுண்ட் வலம் வந்தவர். அறிமுகமான 2018 ஆம் ஆண்டில் 14 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். ஆனால், அதன் பிறகு ஜொலிக்கவில்லை. கடைசியாக 2021 ஐபிஎல் சீசனில் ஒரு போட்டியில் மட்டும் விளையாடி 2 விக்கெட்களை எடுத்தார். 2020-ல் 2 போட்டிகளில் விளையாடி விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. ஒருகோடி ரூபாய் அடிப்படையில் விலையில் களமிறங்கிய அவரை யாரும் ஏலம் கேட்கவில்லை.

4. ஜேம்ஸ் நீஷம்

நியூசிலாந்து அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்ந்தவர். ஆனால், ஐபிஎல் போட்டிகளில் முழுமையாக சோபிக்க முடியவில்லை. 2014 ஆம் ஆண்டே ஐபிஎல்-லில் எண்ட்ரி கொடுத்துவிட்டாலும், மொத்தமே 3 சீசன்களில் தான் இதுவரை விளையாடி இருக்கிறார். 2021 ஐபிஎல் சீசனில் 3 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளையும் சாய்த்தார். இந்நிலையில், 2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் 2 கோடி ரூபாய் என்ற அடிப்படை விலையில் களமிறங்கினார். ஆனால், யாரும் அவரை கண்டுகொள்ளவே இல்லை.

5. முகமது நபி

ஆப்கானிஸ்தான் அணியில் சிறந்த ஆல் ரவுண்டராக இருப்பவர். 2017 முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை 17 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளதோடு 180 ரன்களையும் அடித்துள்ளார். தொடர்ச்சியான சொதப்பல்கள் காரணமாக கொல்கத்தா அணி இவரை ரிலீஸ் செய்திருந்தது. இவரையும் யாரும் ஏலத்தில் கேட்கவில்லை.