Top 5 Indian Sports Players  PT
விளையாட்டு

Rewind 2023: சாத்விக்-சிராக் to நீரஜ் சோப்ரா! உலக விளையாட்டில் சாதனை படைத்த டாப் 5 இந்திய வீரர்கள்!

கிரிக்கெட்டை அதிகமாக கொண்டாடும் இந்திய நாட்டில் 2023ம் வருடம் மட்டும் மற்ற விளையாட்டுதுறையை சேர்ந்த வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து அசத்தியுள்ளனர்.

Rishan Vengai

சாத்விக்-சிராக் பேட்மிண்டன் இணை: உலக நம்பர் 1 வீரர்களாக மாறி சாதனை!

இந்திய பேட்மிண்டன் இணையனரான சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இருவரும் உலக பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் இரட்டையர் பிரிவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தனர். இந்த சாதனையை படைக்கும் முதல் இந்திய இரட்டையர் என்ற பெருமையையும் பெற்றனர்.

Satwiksairaj Rankireddy and Chirag Shetty

"அழிவின் சகோதரர்கள் (Brothers of Destruction)" என்று அழைக்கப்படும் இந்த இந்திய ஜோடி, பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகள் இரண்டிலும் பூப்பந்து விளையாட்டில் நாட்டிற்காக முதல் தங்கப் பதக்கத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று வரலாறு படைத்தனர். மேலும் “2023 சுவிஸ் ஓபன் பேட்மிண்டன், 2023 இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்” இரண்டிலும் சாம்பியன்சிப் பட்டம் வென்ற இவர்கள், இதை முதல்முறையாக வென்ற இந்தியாவின் முதல் ஆண்கள் இரட்டையர் என்ற பெருமையை பெற்றனர். அதுமட்டுமல்லாமல் 2023 கொரியா ஓபனையும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை வென்று சாதனை படைத்தது.

ஜோதி சுரேகா வென்னம்: 3 தங்கப் பதக்கங்களை வென்ற வில்வித்தை வீராங்கனை!

Jyothi Surekha Vennam

ஜோதி சுரேகா வென்னம் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கூட்டு வில்வித்தை அணியை வழிநடத்தி, பெண்கள் தனிநபர், மகளிர் அணி மற்றும் கலப்புப் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

நீரஜ் சோப்ரா: உலக தடகள சாம்பியன்ஷிப் வென்று சாதனை!

ஈட்டி எறிதலில் இந்தியாவின் ஹீரோவாக இருந்துவரும் 25 வயது நிரம்பிய நீரஜ் சோப்ரா, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் முதலிடம் பிடித்து இந்த சாதனையை படைத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைத்தார்.

Neeraj Chopra

மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற அவர், டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து அசத்தினார்.

நிகத் ஜரீன்

குத்துச்சண்டையின் 48-50 கிலோ எடைப்பிரிவு என எடுத்துக்கொண்டால், அதன் ராணி என புகழப்படுபவர் நிகத் ஜரீன். இந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை வென்ற நிகத், இரண்டு முறை உலக சாம்பியன் ஆன வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.

Nikhat Zareen

2011-ம் ஆண்டு ஆண்டலியாவில் நடைபெற்ற AIBA பெண்கள் இளைஞர் & ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற அவர், 2022 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் மற்றும் 2023 புது தில்லி IBA மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் என இரண்டிலும் வென்று அசத்தினார். இதன்மூலம் உலக சாம்பியன் போட்டிகளில் 2 முறை தங்கப் பதக்கங்களை வென்ற வீராங்கனை என்ற வரலாற்று சாதனை படைத்தார்.

பிரக்ஞானந்தா: செஸ் உலக கோப்பையில் ரன்னர்!

FIDE உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக இறுதிப்போட்டியில் விளையாடிய ஆர்.பிரக்ஞானந்தா இந்தியாவை பெருமைப்படுத்தினார். இறுதிப்போட்டியில் மேக்னஸுக்கு சிம்மசொப்பனமாக விளையாடிய பிரக்ஞானந்தா, போட்டியை சமன்செய்து டைபிரேக்கர் முறையில் தோல்வியை தழுவினார்.

Magnus Carlsen - Praggnanandhaa

பிரக்ஞானந்தா கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற நிலையில், அவருடைய சகோதரி வைஷாலியும் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று அசத்தினார். இதன்மூலம் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற முதல் சகோதரர்-சகோதரி என்ற சாதனையை பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி படைத்துள்ளனர். தமிழகத்திலிருந்து கிராண்ட்மாஸ்டர் பட்டம் முதல் பெண் என்ற சாதனை படைத்த வைஷாலிக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.