விளையாட்டு

தோனி “கிரிக்கெட்டின் ஜென்டில்மேன்” என நிரூபித்த 5 நெகிழ்ச்சியான சம்பவங்கள்!

தோனி “கிரிக்கெட்டின் ஜென்டில்மேன்” என நிரூபித்த 5 நெகிழ்ச்சியான சம்பவங்கள்!

ச. முத்துகிருஷ்ணன்

சாதனைகள் பல இருந்தபோதிலும், தோனி தனது அணி ஜென்டில்மேன் கேமை வெளிப்படுத்துவதை எப்போதும் உறுதி செய்தார். தோனி கிரிக்கெட்டின் ஜென்டில்மேன் என நிரூபித்த டாப் 5 சம்பவங்கள் இதோ!

சமீபத்திய நாட்களில் ஸ்போர்ஸ்மேன்ஷிப் (Sportsmanship) இப்போது அரிதாக மாறிவிட்டது. ஜென்டில்மேன் கேம் என்பதன் அர்த்தம் கூட பல முன்னணி வீரர்களுக்கு தெரியாமல் இருக்கிறது. விளையாட்டில் வெற்றி முக்கியமே! ஆனால் அதையும் மீறி வெளிப்படும் ஸ்போர்ஸ்மேன்ஷிப் இரு உண்மையான வீரனுக்கான தகுதியாக பார்க்கப்படுகிறது.

ஸ்போர்ஸ்மேன்ஷிப்போடு விளையாடப்படும் ஒவ்வொரு ஆட்டமும் பார்வையாளர்களுக்கு மட்டுமல்ல தோற்கும் அணிக்கும் ஒரு மனநிறைவை அளிக்கும். அதை எவ்வாறு வெளிப்படுத்துவது? யாராவது அதை சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார்களா? என்றால் ஆம்! ஒருவர் எப்போதும் ஜென்டில்மேன் கேமை வெளிப்படுத்த தவறவில்லை. அவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி.

அவரது கேப்டன் பதவியில், 2007 இல் ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2011 இல் ஐசிசி உலகக் கோப்பை மற்றும் 2013 இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றது. இந்த சாதனைகள் இருந்தபோதிலும், அவர் தனது அணி ஜென்டில்மேன் கேமை வெளிப்படுத்துவதை எப்போதும் உறுதி செய்தார். தோனி கிரிக்கெட்டின் ஜென்டில்மேன் என நிரூபித்த டாப் 5 சம்பவங்கள் இதோ!

1. கங்குலியின் கடைசி போட்டியில் அவரிடம் கேப்டன் பதவியை ஒப்படைத்தார்!

இந்திய கிரிக்கெட்டின் தோற்றத்தையே மாற்றியவர் சவுரவ் கங்குலி. மேட்ச் பிக்சிங் ஊழலால் இந்திய அணி மோசமாக பாதிக்கப்பட்டபோது அவர் கேப்டனாக பொறுப்பேற்றார். இருப்பினும், அவரது ஆக்ரோஷமான கேப்டன்சியால், அவர் இந்தியாவை பல மறக்கமுடியாத வெற்றிகளுக்கு அழைத்துச் சென்றார்.

நவம்பர் 2008 இல் நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கங்குலி தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அப்போது இந்திய அணிக்கு தலைமை தாங்கிய தோனி, முன்னாள் கேப்டன் கங்குலிக்கான மரியாதையின் அடையாளமாக அவரை கேப்டனாக பொறுப்பேற்று அப்போட்டியில் அணியை வழிநடத்துமாறு கேட்டுக் கொண்டார். கங்குலி இதை எதிர்பார்க்கவே இல்லை. தோனியின் இந்த நடவடிக்கை அவரை திக்குமுக்காடச் செய்தது.

முதலில் அந்த வாய்ப்பை கங்குலி நிராகரித்தாலும், தோனி வற்புறுத்தி கேப்டன்சியை ஏற்குமாறு கேட்டார். இந்த முறை கங்குலியால் அந்த வாய்ப்பை மறுக்க முடியவில்லை. இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான கங்குலி, அணியை மீண்டும் ஒரு முறை தனது அணியை கேப்டனாக வழிநடத்தினார், இதை விட ஒரு சிறந்த பிரியாவிடை பற்றி யாருக்கும் கிடைத்திருக்காது என்று அவர் குறிப்பிட்டார்.

2. இயன் பெல்லின் சர்ச்சைக்குரிய ரன் அவுட்!

2011ல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் இயன் பெல் 137 ரன்கள் எடுத்திருந்த போது சர்ச்சைக்குரிய வகையில் ரன் அவுட் ஆனார். பிரவீன் குமார் வீசிய 66வது ஓவரின் கடைசி பந்தை டீப் ஸ்கொயர் லெக்கில் விளாசினார் இயான் மோர்கன்.

மூன்று ரன்களை இருவரும் ஓடினார்கள். ஆனால் கிரீஸை தொடாமல் பெல் ஆடுகளத்தில் பாதி வழியில் தேநீர் இடைவேளைக்காக டிரஸ்ஸிங் அறையை நோக்கி நடந்தார், பிறகு நகர்ந்தார். இதற்கிடையில், அபினவ் முகுந்த் பந்தை எடுத்து ரன்அவுட் செய்து நடுவரிடம் முறையிட்டார். நடுவர்கள் ரீப்ளேக்களை சரிபார்த்து, கிரீஸை பெல் தொடவில்லை என்பதை உறுதிசெய்து அவர் அவுட் என அறிவித்தனர்.

இடைவேளையின் போது, இங்கிலாந்து கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மற்றும் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் ஆகியோர் மேல்முறையீட்டை வாபஸ் பெறுமாறு தோனியிடம் கோரிக்கை விடுத்தனர். இந்திய கேப்டன் தோனி தனது அணியின் மேல்முறையீட்டை வாபஸ் பெற்று, பெல்லை திரும்ப அழைக்க முடிவு செய்தார். தோனியின் இந்த செயல் இங்கிலாந்து அணியினர் அனைவரும் எழுந்து நின்று கைதட்ட வைத்தது. தோனி விளையாட்டின் ஸ்போர்ஸ்மேன்ஷிப்பை நிலைநாட்டியதற்காகப் பாராட்டப்பட்டார். மேலும் அங்கிருந்தவர்கள் இதயங்களை மட்டுமல்லாது அவர் அந்த ஆண்டிற்கான ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதையும் வென்றார்.

3. கோலியை வெற்றிக்கான இறுதி ரன்களை எடுக்க அனுமதித்தது!

எம்எஸ் தோனியை சிறந்த ஃபினிஷராக அடிக்கடி பார்த்திருப்போம். நெருக்கடியான சூழ்நிலைகளை கையாண்டு போட்டிகளை தனக்கே உரிய பாணியில் முடிப்பதில் தோனியின் பாணி தனிரகம். ஆனால் ஃபினிஷராக பல போட்டிகளை வெற்றியுடன் முடித்த தோனி, 2017 இல் கொழும்புவில் நடந்த இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், விராட் கோலியை ஃபினிஷராக விளையாட அனுமதித்தார்.

அந்த போட்டியில், கோஹ்லி 116 பந்துகளில் 110 ரன்கள் குவித்து ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு தேவையான ரன்களை குவித்து இருந்தார். கோஹ்லி 109 ரன்களுடன் பேட் செய்து கொண்டிருந்த போது, ஸ்டிரைக்கர் கிரீஸுக்கு வந்த தோனி, தான் சந்தித்த முதல் பந்திலேயே சிங்கிள் ரன் எடுத்து ஸ்டிரைக்கை கோலிக்கு கொடுத்தார். கோஹ்லியை ஸ்டிரைக்கில் கொண்டு வந்து வெற்றி ரன்களை எடுக்கச் செய்தார். தனக்கே உரிய புன்னகையை உதிர்த்து வெற்றி ரன்களை விளாசினார் கோலி.

இது தோனிக்கும் கோலிக்கும் முதல்முறை நிகழ்ந்த சம்பவம் அல்ல. 2014 ஐசிசி உலக டி20 அரையிறுதியிலும் தோனி இதையே செய்தார். கோலி போட்டியை முடிக்க ஒரு பந்தை தோனி ரன் எடுக்காமல் விட்டார். வெற்றி ரன்களை கோலி அடித்தபிறகான பேட்டியில் “நீங்கள் நன்றாக பேட்டிங் செய்தீர்கள். நான் உங்களுக்கு வேறு என்ன பரிசளிக்க முடியும்?” என்று சிம்பிளாக கூறினார் தோனி.

4. வெற்றிக்கோப்பையை இளம் வீரர்களிடம் ஒப்படைப்பது!

கிரிக்கெட் ஒரு “குழு” விளையாட்டு. ஒரு அணி வெற்றிபெற வேண்டுமானால் அதில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பங்கு உண்டு. இருப்பினும் வெற்றிக்கோப்பை கேப்டனிடம் கொடுக்கப்படும். தோனியும் கேப்டனாக பல முறை வெற்றிக்கோப்பைகளை வாங்கியுள்ளார். ஆனால் கோப்பையை வாங்கிய பிறகு, தோனி எப்போதும் கோப்பையை இளம் வீரர்களிடம் ஒப்படைத்து விடுவார். இது ஒரு சிறந்த செய்கை! ஏனென்றால் இளம் வீரர்கள் அப்போது வெற்றிக் கொண்டாட்ட தருணத்தை அதிகமாக அனுபவிக்க முடியும்.

2013 இல், இந்தியா மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து முத்தரப்புத் தொடரில் பங்கேற்றது. மூன்றாவது அணியாக இலங்கை கலந்துகொண்டது. லீக் கட்டத்தில் தோனி காயமடைந்தார். அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக அதன்பின்னான போட்டிகளில் கோலி இந்திய அணியை வழிநடத்தினார். இருப்பினும் தோனி இறுதிப் போட்டியில் மீண்டும் அணிக்கு வந்து கடைசி ஓவரில் த்ரில்லாக ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தார். தோனி வெற்றிக் கோப்பையைப் பெற்றபோது, லீக் போட்டிகளில் அணியை சிறப்பாக வழிநடத்தியதால், அக்கோப்பையை கோலியுடன் பகிர்ந்து கொண்டார்.

5. மைதானத்தில் டுபிளெசிஸ்-க்கு பிசியோவாக மாறிய தோனி!

2015 இல் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தது. பல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் அக்டோபரில் ஈரப்பதம் மற்றும் வெப்பத்தை தாங்க முடியாமல் சோர்வாக இருந்தனர். தென்னாப்பிரிக்க வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் தனது சதத்தை நெருங்கும் கட்டத்தில் ஒரு சிக்ஸர் அடிக்க முயன்றபோது, துரதிர்ஷ்டவசமாக, அவர் தனது சமநிலையை இழந்து கீழே விழுந்தார்.

டு பிளெசிஸ் தனது தசைப் பிடிப்புகளுடன் மிகவும் போராடுவதாகத் தோன்றியது. அப்போது வெளியான வீடியோவில் அவரது கண்களில் வலியை நாம் உண்மையில் பார்க்க முடிந்தது. பின்னர் தோனி மைதானத்தில் பிசியோவாக மாற்றினார். அவர் டு பிளெசிஸின் கால்களை பிடித்து, மருத்துவ ஊழியர்கள் வரும் வரை அவரது தசைகளை ஓய்வெடுக்க அனுமதித்தார்.

இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒன்றாக விளையாடியவர்கள். களத்தில் எதிரணி வீரருக்கு ஒரு பிரச்னை எனும்போது உதவிக்கரம் நீட்டிய தோனி செய்த இந்த சம்பவம் கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தது.

கிரிக்கெட்டில் எப்போதும் ஜென்டில்மேனாக திகழ்ந்த, திகழும் தோனிக்கு ஜூலை 7 அன்று பிறந்த நாள். அதை சிறப்பிக்கும் விதமாக ஜூலை 1 முதல் புதிய தலைமுறை இணையதளத்தில் தொடர்ச்சியாக கட்டுரை வெளியாகி வருகிறது.

முந்தைய கட்டுரைகள்: