விளையாட்டு

சிக்ஸர்கள் முதல் ஸ்டம்பிங் வரை... - 40 வயதை கொண்டாடும் தோனியின் டாப் 10 சாதனைகள்!

சிக்ஸர்கள் முதல் ஸ்டம்பிங் வரை... - 40 வயதை கொண்டாடும் தோனியின் டாப் 10 சாதனைகள்!

jagadeesh

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று தன்னுடைய 40-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தோனியின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் #HappyBirthdayDhoni என்ற ஹேஷ்டேக்குடன் தெறிக்கவிட்டு வருகின்றனர். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒப்பற்ற கேப்டனாக கருதப்படும் தோனியின் டாப் 10 சாதனைகளை இப்போது தெரிந்துக் கொள்ளலாம்.

1. கபில்தேவ், கங்குலி ஆகியோர் இந்தியாவின் சிறந்த கேப்டன்களாக அறியப்பட்டாலும் தோனி எப்போதுமே ஒரு விஷயத்தில் சிறப்பு வாய்ந்தவர். அதாவது மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்றவர் என்ற பெருமைதான் அது. தோனி தலைமையில் இந்திய அணி 2007-ல் டி20 உலகக் கோப்பை, 2011-ல் 50 ஓவர் உலகக் கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் கோப்பை என்ற மூன்று பட்டங்களையும் வென்றது.


2. 2007-ஆம் ஆண்டு டி20 போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட தோனி, பின்பு 2008-ஆம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்தியாவுக்காக 332 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். இது ஒரு உலகச் சாதனை. தோனிக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 324 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

3. அதிக வெற்றிகளை பெற்றுத் தந்த கேப்டன் என்ற சாதனையும் தோனி படைத்துள்ளார். தோனி தலைமயில் 332 போட்டிகளை களம் கண்ட இந்திய அணி மொத்தம் 178 போட்டிகளில் வெற்றி வாகையைச் சூடியுள்ளது. அதேபோல 200 ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே தோனி கேப்டனாக இருந்துள்ளார். இது உலகளவில் எந்தவொரு கேப்டனும் செய்யாதது.

4. இந்திய கேப்டன்களில் இதுவரை அதிக ரன்களை குவித்தது தோனி மட்டுமே. 200 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த தோனி 6641 ரன்களை குவித்துள்ளார், அவரது சராசரி 53.56. வேறு எந்த இந்தியக் கேப்டன்களும் இந்தச் சாதனையை செய்ததில்லை. சர்வதேச அளவில் ரிக்கி பாண்டிங்கின் அடுத்த இடத்தில் இருக்கிறார் தோனி.

5. அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டன் என்ற பெருமையும் தோனிக்குதான் சொந்தம். 200 ஒருநாள் போட்டிகளில் 204 சிக்ஸர்களை பறக்கவிட்டிருக்கிறார் தோனி. இது சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் எட்ட முடியாது மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

6. ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கும் தோனி இதிலும் சாதனைப் படைத்திருக்கிறார். ஐபிஎல் வரலாற்றில் அதிகப் போட்டியில் வெற்றிகளை குவித்த கேப்டனும் தோனி மட்டுமே. இதுவரை சிஎஸ்கே அணிக்கு 174 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த தோனி 104 போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறார்.

7. சர்வதேச அளவில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அடித்த அதிகப்பட்ச ஸ்கோர் என்ற சாதனையும் தோனிக்கு சொந்தமானதே. 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 145 பந்துகளில் 183 ரன்களை குவித்தார் தோனி. அதில் மொத்தம் 10 சிஸ்கர்கள் 14 பவுண்டரிகள் அடங்கும்.

8. சிக்ஸரை பறக்கவிட்டு உலகக் கோப்பையை வென்ற கேப்டன்கள் சர்வதேச அளவில் யாரும் இல்லை. அந்தச் சாதனையும் தோனிக்கே சொந்தம். 2011 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் குலசேகராவின் பந்தை வான்கடே மைதானத்தில் சிக்ஸருக்கு விளாசி கோப்பையை இந்தியாவின் வசமாக்கினார் தோனி.

9. அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் தோனியை சார்ந்ததே. டி20, ஒருநாள், டெஸ்ட் என 538 போட்டிகளுக்கு விக்கெட் கீப்பராக இருந்த தோனி 195 முறை ஸ்டம்பிங் செய்துள்ளார். இது ஒரு உலகச் சாதனை. இவருக்கு அடுத்தபடியாக இலங்கை அணியின் குமார சங்கக்கரா 139 முறை ஸ்டம்பிங் செய்திருக்கிறார்.

10. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தலைச்சிறந்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் தோனிக்குதான். மொத்தம் 829 முறை சர்வதேச கிரிக்கெட்டில் எதிரணி வீரர்களை அவுட் செய்துள்ளார் தோனி. அதில் 195 ஸ்டம்பிங், 634 கேட்சுகளும் அடங்கும் என்பது அசுரத்தனமான சாதனை.