விளையாட்டு

அமீரகத்தில் தொடரும் ஐபிஎல்: இதுவரை ரன்களை குவித்த டாப் 10 பேட்ஸ்மேன்கள் யார்?

அமீரகத்தில் தொடரும் ஐபிஎல்: இதுவரை ரன்களை குவித்த டாப் 10 பேட்ஸ்மேன்கள் யார்?

jagadeesh

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு சீசன் ஐபிஎல் போட்டிகள் தொடர இருப்பதால் எதிர்பார்ப்புகள் எகிறி இருக்கிறது. இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டு, இப்போது மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

இந்தியாவில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் மீதமிருக்கும் போட்டிகள் அமீரகத்தில் இருக்கும் அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா மைதானங்களில் நடைபெற இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் 30-ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை - சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. இதுவரை இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளின் முடிவில் நடப்பு சீசன் ஐபிஎல்லில் ரன்களை சேர்த்த டாப் 10 பேட்ஸ்மேன்கள் யார் என்பதை பார்க்கலாம்.

ஷிகர் தவான் - டெல்லி கேபிடல்ஸ்: 8 போட்டிகளில் 380 ரன்கள் குவித்து தவான் முதலிடத்தில் முத்திரை பதித்துள்ளார். இதில் 3 அரை சதங்களும் அதிகபட்சமாக 92 ரன்களையும் சேர்த்துள்ளார் ஷிகர் தவான். மேலும் அவரின் ஆவரேஜ் 54.28 ஆகவும், ஸ்டைக் ரேட் 134.27 ஆகவும் இருக்கிறது.

கே.எல்.ராகுல் - பஞ்சாப் கிங்ஸ்: கேப்டனாக இருக்கும் ராகுல் ஒற்றை ஆளாக அணிக்கு ரன்களை சேர்த்து வருகிறார். 7 போட்டிகளில் 331 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இதில் மொத்தம் 4 அரை சதங்கள், அதிகபட்சமாக 91 ரன்கள் நாட் அவுட். அவரின் ஆவரேஜ் 66.20. ஸ்டிரைக் ரேட் 136.21.

பாஃப் டூபிளசி - சென்னை சூப்பர் கிங்ஸ்: சென்னையின் நம்பிக்கையான இவர் 7 போட்டிகளில் 320 ரன்களை சேர்த்துள்ளார். இதில் மொத்தம் 4 அரை சதங்கள், அதிகபட்சமாக 95 ரன்கள் நாட் அவுட். டூபிளசியின் ஆவரேஜ் 64, ஸ்டிரைக் ரேட் 145.45 என அசத்துகிறது.

பிருத்வி ஷா - டெல்லி கேப்பிடல்ஸ்: இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் டெல்லியின் அஸ்திவாரமான இவர் 8 போட்டிகளில் 308 ரன்கலை சேர்த்துள்ளார். 3 அரை சதங்கள், அதிகபட்சமாக 82 ரன்கள். பிருத்வி ஷாவின் ஆவரேஜ் 38.50 என சுமாராக இருந்தாலும் அவரின் ஸ்டிரைக் ரேட் 166.48 என பயமுறுத்துகிறது.

சஞ்சு சாம்சன் - ராஜஸ்தான் ராயல்ஸ்: கேப்டனாகி இருக்கும் இவர் 7 போட்டிகளில் 277 ரன்களை சேர்த்துள்ளார். இதில் ஒரு சதமும் அடங்கும். அதிகபட்சமாக 119 ரன்களை குவித்துள்ளார் சஞ்சு சாம்சன். இவரின் ஆவரேஜ் 46.16 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 145.78 ஆக இருக்கிறது.

மயாங்க் அகர்வால் - பஞ்சாப் கிங்ஸ்: பஞ்சாபின் தூணான இவர் 7 போட்டிகளில் 260 ரன்களை அடித்துள்ளார். இதுவரை இரண்டு அரை சதம் விளாசிய இவர், அதிகபட்சமாக 99 நாட் அவுட். மயாங்கின் ஆவரேஜ் 43.33, ஸ்டிரைக் ரேட் 141.30 ஆக உள்ளது.

ஜோஸ் பட்லர் - ராஜஸ்தான் ராயல்ஸ்: இங்கிலாந்தின் அதிரடியான வீரர் இதுவரை 7 போட்டிகளில் 254 ரன்களை எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் அதிகபட்சமாக 124 ரன்களை விளாசியுள்ளார். பட்லரின் ஆவரேஜ் 36.28, ஸ்டிரைக் ரேட் 153.01 ஆக ஜொலிக்கிறது.

ரோகித் சர்மா - மும்பை இந்தியன்ஸ்: ஹிட்மேன் இதுவரை 7 போட்டிகளில் 250 ரன்களை எடுத்துள்ளார். இதில் ஒரு அரை சதம். அதிகபட்சமாக 63 ரன்களை எடுத்துள்ளார். ரோகித்தின் ஆவரேஜ் 35.71, ஸ்டிரைக் ரேட் 128.20 ஆகவும் இருக்கிறது.

ஜானி பேர்ஸ்டோ - சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்: விக்கெட் கீப்பரான இவர் 7 போட்டிகளில் 248 ரன்கள், இரண்டு அரைசதம், அதிகபட்சம் 63 நாட் அவுட். ஆவரேஜ் 41.33, ஸ்டிரைக் ரேட் 141.71.

கிளென் மேக்ஸ்வெல் - ஆர்சிபி: ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் இதுவரை 7 போட்டிகளில் 223 ரன்கள், 2 அரை சதம், அதிகபட்சம் 78 ரன்கள். ஆவரேஜ் 37.16, ஸ்டிரைக் ரேட் 144.80.