சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை 5 நாள் ஆட்டத்தில் இருந்து 4 நாள்களாக குறைக்க ஐசிசி பரிசீலித்து வருகிறது. 2023 ஆம் தொடங்கவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து நான்கு நாள் டெஸ்டைக் கட்டாய நடைமுறைக்கு கொண்டுவர ஐசிசி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் டி20 போட்டிகள், பிசிசிஐ திட்டமிடும் நான்கு நாடுகள் போட்டி, டெஸ்ட் தொடருக்கு உண்டாகும் செலவுகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை ஐசிசி எடுக்கவுள்ளது. இதன்மூலம் பல நாள்கள் கூடுதலாகக் கிடைக்கும். அதைவைத்து வேறு போட்டிகளை நடத்திக்கொள்ளலாம் என்பது ஐசிசியின் வருங்காலத் திட்டங்களில் ஒன்றாக உள்ளது.
உதாரணமாக 2015 முதல் 2023 வரையிலான டெஸ்ட் தொடர்களை நான்கு நாள்களாகச் சுருக்கினால் 335 நாள்கள் மிச்சமாகும். இதனைக் கொண்டு கூடுதலாக ஒருநாள், டி20 ஆட்டங்களை நடத்தலாம். மேலும் 4 நாள்கள் டெஸ்ட் எனும்போது கூடுதலாகவும் டெஸ்ட் ஆட்டங்களை விளையாட முடியும் என்பதும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. நான்கு நாள் டெஸ்ட் என்றால் நான்கு டெஸ்டுகளுக்குப் பதிலாக ஐந்து டெஸ்டுகளை நடத்தவும் வாய்ப்பு கிடைக்கும்.
அப்படி, நான்கு நாள் டெஸ்ட் கட்டாயமாக்கப்படும் பட்சத்தில் ஒருநாளைக்குக் குறைந்தது 90 ஓவர்கள் வீசவேண்டும் என்கிற விதிமுறை மாற்றப்பட்டு 98 ஓவர்களாக அதிகரிக்கப்படும். இதன்மூலம் 58 ஓவர்களை மட்டுமே இழக்க நேரிடும். கூடுதல் ஓவர்களை வீசுவதன் மூலம் டெஸ்ட் முடிவுகளில் பாதகம் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி " ஐசிசியின் இந்த யோசனையை முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். முதலில் திட்டம் வரட்டும் பின்பு பார்த்துக்கொள்ளலாம். எனவே 4 நாள் ஆட்டம் குறித்து இப்போது கருத்து தெரிவிப்பது சரியானதாக இருக்காது" என்றார்.