இன்று இந்தியா - நியூசிலாந்து போட்டி முழுவதும் நடக்கும் எனவும் அங்கு மழைக்கு வாய்ப்பில்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று களம் கண்டன. 46.1 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. இதனையடுத்து எஞ்சியுள்ள ஆட்டம் இன்று தொடரும் என நடுவர்கள் தெரிவித்தனர். மைதானத்துக்கு போட்டியைக் காண வந்த ரசிகர்கள் அதே நுழைவுச்சீட்டைக் காண்பித்து இன்றைய போட்டியைக் காணலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஒருவேளை இன்றும் மழை பெய்யும்பட்சத்தில், லீக் சுற்றின் முடிவில் அதிக புள்ளிகளைப் பெற்ற அணி என்ற அடிப்படையில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தானாகவே முன்னேறிவிடும். இன்றாவது மழை குறுக்கிடாமல் முழு போட்டியும் நடைபெற வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்றைய இந்தியா - நியூசிலாந்து போட்டி முழுவதும் நடக்கும் என்றும் அங்கு மழை குறுக்கிட வாய்ப்பில்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இன்றைய போட்டியை காண ஆவலாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்