புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் அதிக எடை தூக்கி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவரின் இந்த சாதனையை கொண்டாடும் வகையில் அக்கிராமமே மகிழ்ச்சியில் திழைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சி நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்தவர் அனுராதா. இவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், சமோவ் தீவில் உள்ள அபியா நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 87 கிலோ உடல் எடைப் பிரிவில் 'ஸ்னாச்' முறையில் 100 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 121 கிலோ என மொத்தம் 221 எடை தூக்கி தங்க பதக்கம் வென்றார்.
பளுதூக்கும் போட்டியில் தொடக்க காலத்தில் தமிழகத்தில் பயிற்சி பெற்ற அனுராதா, பின்னர் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்காக பஞ்சாப் மாநிலத்தில் சிறப்பு பயிற்சியை பெற்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அனுராதாவுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்பு 2009-ல் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் அனுராதா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்: “ அனுராதாவின் 13 வயதில் அவரது தந்தை விபத்தில் இறந்து விட்டார். அதன் பின்பு அவரின் ஆர்வத்தை கண்ட அவரது தாய் மற்றும் அண்ணன் அவருக்கு தடையாக இல்லாமல் கூலி வேலை செய்து அவரை பளு தூக்கும் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி ஊக்கப்படுத்தினார்கள். ஆனால், இன்று எங்கள் கிராமத்தை சேர்ந்த மங்கை இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருக்கிறார்” எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து அனுராதாவின் அண்ணன் மாரிமுத்து கூறுகையில்: “ பல தடைகளை கடந்து தான் அனுராதா இந்த சாதனையை படைத்துள்ளார். பெண் பிள்ளை என்பதால் அவரை பளு தூக்கும் போட்டிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று பலரும் அறிவுறுத்தினார்கள். ஆனால் தங்கையின் ஆசையை நிறைவேற்றவே நானும் அம்மாவும் கூலி வேலை செய்து அவரை பயிற்சிக்கு அனுப்பினோம்” எனக் கூறினார்.
காமன்வெல்த் போட்டிகளில் அனுராதா தங்கம் வென்று இருக்கும் நிலையில் அரசின் உதவிகள் கிடைத்தால் அடுத்து வருகின்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் அவர் நிச்சயம் தங்கம் வெல்வார் என அனுராதாவின் குடும்பத்தினர், ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.