விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஷிப் வலுதூக்குதல்: 3 தங்கம் வென்று தமிழக வீரர் சாதனை..!

ஆசிய சாம்பியன்ஷிப் வலுதூக்குதல்: 3 தங்கம் வென்று தமிழக வீரர் சாதனை..!

Rasus

ஆசிய சாம்பியன்ஷிப் வலுதூக்கும் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரரான நவீனுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அண்மையில் ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வலுதூக்கும் போட்டியில் சென்னையை சேர்ந்த வீரரான நவீனும் கலந்துகொண்டார். 17 வயதான அவர், போட்டியில் 3 தங்கப் பதக்கம் வென்றதோடு, ஒரு வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்தார். ஸ்குவாட் பிரிவில் 250 கிலோவை தூக்கி தங்கமும், பெஞ்ச் பிரஸ் பிரிவில் 135 கிலோவை தூக்கி வெண்கலப் பதக்கமும், டெட் லிப்ட் பிரிவில் 235 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் வென்றுள்ளார் நவீன். இதுதவிர ஒட்டுமொத்த பிரிவிலும் நவீன் தங்கம் வென்றிருக்கிறார்.

சென்னை அயனாவரத்தை சேர்ந்த நவீன் அருகம்பாக்கத்தில் உள்ள டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொருளாதாரம் படித்து வருகிறார். நவீனின் தந்தையான சம்பத் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இருந்தாலும் வீட்டில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வசதி இல்லை. இந்நிலையில் தான் தன் கடின பயிற்சி மூலம் தங்கப் பதக்கம் வென்று சாதித்து காட்டியிருக்கிறார் நவீன்.

இதுகுறித்து நவீனின் தந்தையான சம்பத் கூறும்போது, “ நவீன் சத்தாண உணவு சாப்பிட வேண்டியிருக்கிறது. சிக்கன், மட்டன், வெஜிடபிள், பழங்கள் என ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையே தினசரி உட்கொள்ள வேண்டியுள்ளது. 15 வயதிலிருந்தே இதற்காக கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தினமும் 5 முதல் 6 மணி நேர பயிற்சி மேற்கொள்வார். இவரின் திறமையை பார்த்த பயிற்சியாளர், நவீனுக்கு இலவசமாக பயிற்சி கொடுத்து வருகிறார். எனக்கும் விளையாட்டுத் துறையில் சாதிக்க சிறுவயதில் ஆர்வமும் இருந்தது. அப்போது குடும்பச் சூழல் அதனை தடுத்தது. இப்போது என் மகன் முன்னேறிக் கொண்டிருக்கிறார். அவருக்கு தமிழக அரசு போதிய அளவில் நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து நவீன் கூறும்போது, “ நான் தங்கம் வென்றபோது இந்தியாவின் தேசிய கீதம் ஒலித்தது. அப்போது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளேன். கண்டிப்பாக காமன்வெல்த் போட்டியிலும் பதக்கம் வெல்வேன். காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்கு தமிழக அரசும் உதவ வேண்டும்” எனக் கூறியுள்ளார்.