சுபாஷினி PT Desk
விளையாட்டு

தேசிய அளவில் முதலிடம் பிடித்த தமிழ்நாட்டு சிங்கப்பெண்.. அடுத்த இலக்கு ஒலிம்பிக்!!

தேசிய அளவிலான 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடம் பெற்ற தமிழ்நாட்டு மகள். சர்வதேச அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், ‘பெற்றோர் தந்த நம்பிக்கைதான் வெற்றிக்கு காரணம்’ என்று நெகிழ்ச்சி.

யுவபுருஷ்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் எட்டயபுரம் பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சுபாஷினி(20) திருநெல்வேலி பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதுகலை சமூக பணி பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் கோவா மாநிலத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டு ஊக்குவிப்பு சங்கம் சார்பில் நடந்த தேசிய தடகள விளையாட்டு போட்டியில், 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் பங்கேற்றார்.

அதில் முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் அடுத்த மாதம் நேபாளத்தில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் சுபாஷினி. தேசிய அளவிலான 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றுள்ள சுபாஷினியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பாராட்டி ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். மேலும் பலரும் சுபாஷினியை பாராட்டி வருகின்றனர்.

இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுபாஷினி, “பள்ளியில் படிக்கும்போது விளையாட்டில் ஆர்வம் இருந்த போதிலும் ஒரு தயக்கம் இருந்தது. கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போது நடைபெற்ற விளையாட்டு விழாவில் 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்றதால் தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி முதலிடம் பெற்று பதக்கத்தை வென்றேன். அடுத்ததாக நேபாளத்தில் நடைபெற உள்ள சர்வதேச ஓட்டப்பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளேன்.

என்னுடைய பெற்றோர்கள் என் மீது வைத்த நம்பிக்கையே இந்த முழு வெற்றிக்கும் காரணம். அது மட்டுமல்ல , உறவினர்கள் பொதுமக்கள் என பலரும் என்னை பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள். இனி அடுத்தடுத்து வரும் போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமின்றி, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பது என்னுடைய லட்சியம்” என்றும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.