ராசிபுரம் அருகே ஏழ்மையான தறி தொழிலாளியின் மகனும், கல்லூரி மாணவனுமான லோகேஷ் மும்பை ரயில்வே கிரிக்கெட் அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள கடந்தபட்டியை சேர்ந்த தறித் தொழிலாளி துரைசாமியின் மகன் லோகேஷ். சிறுவயது முதலே கிரிக்கெட்டில் அதிகம் ஆர்வம் கொண்டதால் எப்போதும் கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார். இதனையடுத்து கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் சிறப்பாக விளையாடியதால் ஆத்தூரில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை நன்றாக பயன்படுத்திக்கொண்ட லோகேஷ் பத்து லீக் ஆட்டத்தில் விளையாடி மேன் ஆப்தி சீரிஸ் விருதை வென்றுள்ளார்.
தொடர்ந்து இந்திய வீரரும், தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன் விளையாடிய சென்னை அணியில் விளையாட லோகேஷுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் மும்பை அகாடமி அணிக்கு தேர்வாகி 24 லீக் ஆட்டத்தில் 832 ரன் எடுத்தார். அதில் 73 பவுண்டரி மற்றும் 56 சிக்சர் விளாசியுள்ள அவர் 78 ஓவர்களில் 46 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மும்பை அணியில் சிறப்பாக விளையாடியதால் தற்போது மும்பை ரயில்வே அணியில் விளையாட தேர்வாகியுள்ளார்.