துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் முகநூல்
விளையாட்டு

பாராலிம்பிக்ஸ் 2024 | நாட்டிற்கே பெருமை சேர்த்த தமிழக வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ்

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன், இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனை நிகழ்த்தியிருக்கிறார். அதேபோல் 19 வயதான மற்றொரு தமிழக வீராங்கனையும், நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

PT WEB

பாரிசில் நடைபெறும் பாராலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன், சீன வீராங்கனையான கியுஷியா யாங்கை எதிர்கொண்டார். இதில் 17-க்கு21, 10க்கு21 என்ற புள்ளிக்கணக்கில் துளசிமதி முருகேசன் தோல்வியடைந்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

துளசிமதி முருகேசன்

இதன்மூலம் பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். துளசிமதி முருகேசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உங்களின் அர்ப்பணிப்பும், தளராத மனப்பான்மையும் லட்சக்கணக்கானோரை ஊக்குவிக்கிறது” என எக்ஸ் வலைதளத்தில் புகைப்படத்துடன் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

இதேபோல், வெண்கலத்துக்கான பேட்மிண்டன் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 19 வயதே ஆன மனிஷா ராமதாஸ், டென்மார்க் வீராங்கனை கேத்ரின் ரோசன் கிரேனுடன் மோதினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மனிஷா ராமதாஸ், 21-க்கு12, 21-க்கு18 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.

மனிஷா ராமதாஸ்

அவருக்கு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், “உங்களது மன உறுதி மூலம், தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். ஜொலித்துக்கொண்டே இருங்கள்” என வாழ்த்தியுள்ளார்.