விளையாட்டு

நாட்டை கேலிக்கூத்தாக்குவதா? மலிங்கா மனைவி மீது புகார்!

நாட்டை கேலிக்கூத்தாக்குவதா? மலிங்கா மனைவி மீது புகார்!

webteam

’பழிவாங்கும் நடவடிக்கையால் ஒட்டுமொத்த நாட்டையும் கேலிக்கூத்தாக்குகிறோம்’ என்று இலங்கை அணி கேப்டன் மலிங்காவின் மனைவி மீது அந்நாட்டின் கிரிக்கெட் வீரர் திசாரே பெரேரா பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன், வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா. இவருக்கு முன் தினேஷ் சண்டிமால் ஒரு நாள் அணிக்கும், திசாரா பெரேரா டி20 அணிக்கும் கேப்டனாக இருந்தனர். மலிங்கா, கடந்த வருடம் முழுவதும் அணியில் இருந்து ஓரங்கட்டப் பட்டிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம்தான் அணிக்கு திரும்பினார். அவருக்கு ஒரு நாள் மற்றும் டி20 ஓவர் போட்டி கேப்டன் பதவி இப்போது வழங்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் திசரா பெரேராவுக்கும், மலிங்கா மனைவி தன்யா பெரேராவுக்கும் திடீர் மோதல்.  சமூக வலைத்தளத்தில், இந்த மாத தொடக்கத்தில் தன்யா ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில், நாட்டின் புதிய விளையாட்டு துறை அமைச்சரை நேரில் சந்தித்து, உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் தனது இடத்தை உறுதி செய்ய, திசாரா பெரேரா முயற்சிக்கிறார்’ என்று கூறியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலளிக்கும் விதமாக, 2018 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் தனது செயல்பாடுகளைக் குறிப்பிட்டுப் பதிவிட்டார் திசரா பெரேரா. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அவர், 74 பந்துகளில் 140 ரன்கள் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி அஷ்லே டி சில்வாவுக்கு திசாரா பெரேரா எழுதியுள்ள கடிதத்தில், ‘கேப்டன் பதவியில் இருப்பவரின் மனைவி இது போன்று புகார் சொல்வது என்னை பற்றிய தவறான எண்ணத்தை மக்களிடம் உருவாக்கும். அவரது பதிவுக்கு பிறகு டிரெஸ்சிங் அறையின் சூழல் சிறப்பாக இல்லை. இதுபோன்ற தேவையற்ற சர்ச்சைகளை தவிர்த்து, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மீது கவனம் இருக்க வேண்டும். 

தனிப்பட்ட ஒரு நபரின் பழிவாங்கும் நடவடிக்கையால் ஒட்டுமொத்த நாட்டையும் கேலிக் கூத்தாக்குகிறோம். இலங்கை கிரிக்கெட் வாரியம் இதில் தலையிட்டு இந்த பிரச்னையை தீர்க்க செய்ய வேண்டும். அணிக்குள் ஒற்றுமையையும், நம்பிக் கையையும் கொண்டு வர வேண்டும்’’ என்று கூறியுள்ளார். 

மலிங்கா மனைவி-திசாரா பெரேரா மோதல் இலங்கை கிரிக்கெட் அணியில் பயங்கர சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.