விளையாட்டு

நோ பால்களை மூன்றாவது நடுவர் கண்காணிக்கும் முறை... ரசிகர்கள் உற்சாகம்

நோ பால்களை மூன்றாவது நடுவர் கண்காணிக்கும் முறை... ரசிகர்கள் உற்சாகம்

webteam

இந்திய - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான இருபது ஓவர் போட்டியில், நோ பால்களை மூன்றாவது நடுவர் கண்காணிப்பது நடைமுறைப்படுத்தப்பட்டது.

பந்துவீச்சாளர் ஒருவர் கோட்டை தாண்டி பந்துவீசுவது வெற்றியை கோட்டை விடும் அளவுக்கு கூட தாக்கத்தை ஏற்படுத்தும். அத்தகைய நோ பால்களால் போட்டியின் முடிவுகளே மாறிய தருணங்களும் நிகழ்ந்துள்ளன.

இவ்வாறான நோ பால்களை களநடுவர்கள் துல்லியமாக கண்காணிக்க தவறுவதும் அவ்வப்போது நேரிடுவதுண்டு. அண்மையில், பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில், பாகிஸ்தான் அணி வீரர்கள் 21 முறை கோட்டை தாண்டி பந்துவீசியும் அதனை கள நடுவர்கள் கவனிக்கத் தவறினர். நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் லஸித் மலிங்கா வீசிய நோ பாலை, கள நடுவர் கவனித்திருந்தால் அப்போட்டியின் முடிவே மாறியிருக்குமென ‌ரசிகர்கள் கூறியிருந்தனர்.

இத்தகைய சூழலில் தான், களநடுவரின் பிழைகளை தவிர்க்க மூன்றாம் நடுவர் நோ பால்களை கண்காணிப்பதை ஐசிசி நடைமுறைப்படுத்தியுள்ளது. அனைத்து பந்துகளை‌யும் மூன்றாம் நடுவர் பிரத்யேக கேமிரா மூலமாக கண்காணிப்பதும், கோட்டை தாண்டிவந்து பந்துவீசப்பட்டால் அதை கள நடுவரிடம் தெரிவிப்பதுமே புதிய நடைமுறையாகும்.

இந்த முறை, இந்திய- மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் இருபது ஓவர் போட்டியில் அமல்படுத்தப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் நோ பால்களை மூன்றாம் நடுவர் கண்காணிப்பது இது புதிதல்ல. 2016 ஆம் ஆண்டு, இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஒரு நாள் தொடரில் முதல் முறையாக நோ பாலை மூன்றாம் நடுவர் கண்காணிப்பது சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியா- மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டி 20 போட்டியில், நோ பால்களை மூன்றாம் நடுவர் துல்லியமாக கவனித்ததாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இம்முறையை, அனைத்து போட்டிகளிலும் அமல்படுத்த வேண்டுமென்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.