வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை இலங்கை அணி வென்றது. இதன் மூலம் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி சமன் செய்தது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட தினேஷ் சந்திமால் பந்தை சேதப்படுத்திய விவகாரம் காரணமாக பங்கேற்கவில்லை.
இவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் லக்மல் இலங்கை அணியின் கேப்டனாக செயல்பட்டார். மிகவும் கடுமையானதாக இருந்த இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை கிரிக்கெட் அணி மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இலங்கை அணி தொடர் பின்னடைவை சந்தித்து வந்தது. ஒரு கட்டத்தில் இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்வி குறித்து விசாரணை ஆணையம் அமைக்கும் அளவுக்கு விவகாரம் சென்றது. இதனால் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மன உளைச்சலில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸூடனான இந்த வெற்றி இலங்கைக்கு ஆறுதல் அளித்துள்ளது. இந்த வெற்றிக் குறித்துப் பேசிய இலங்கை அணியின் கேப்டன் சுரங்கா லக்மல் "எங்கள் அணி கடந்த சில ஆண்டுகளாக சரியாக விளையாடவில்லை. தனி ஒரு வீரரருக்கும் அணிக்கும் விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம். வெஸ்ட் இண்டீஸூடனான தோல்விக்கு பிறகு மீண்டு வந்து வெற்றிப் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.