விளையாட்டு

ஆஸ்திரேலியா தப்பிக்க வழியே இல்லை! அவர்கள் 2 பேரையும் சமாளிப்பது கடினமானது!-மைக்கேல் வாகன்

ஆஸ்திரேலியா தப்பிக்க வழியே இல்லை! அவர்கள் 2 பேரையும் சமாளிப்பது கடினமானது!-மைக்கேல் வாகன்

Rishan Vengai

ஆஸ்திரேலியா அணி இந்திய அணியிடம் படுதோல்வி அடைந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை என தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிரோபியின் முதல் டெஸ்ட் போட்டியில், 132 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்தியா பெற்ற மூன்றாவது பெரிய வெற்றியாக நாக்பூரில் நடைபெற்ற அந்த போட்டி அமைந்தது. பந்துவீச்சில் 7 விக்கெட்டுகள் மற்றும் பேட்டிங்கில் முக்கியமான நேரத்தில் 70 ரன்கள் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4 அணிகளுக்கு மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாட வாய்ப்பு!

இந்திய அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிபோட்டிக்கு முன்னேற, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரை 3-0 அல்லது 3-1 என வெல்லவேண்டிய இடத்தில் இருக்கிறது. ஐசிசியானது தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பிருக்கும் அணிகளுக்கான வாய்ப்புகளை வெளியிட்டிருக்கும் பட்டியலில், 4 அணிகளுக்கு மட்டுமே வாய்ப்பிருப்பதாக வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக 76.9 சதவீதம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தான் விளையாட வாய்ப்பிருப்பதாகவும், 17.6 சதவீதம் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு வாய்ப்பிருப்பதாகவும், ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா விளையாட 3.8 சதவீதம் வாய்ப்பிருப்பதாகவும், ஒருவேளை ஆஸ்திரேலியா வெளியேறி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாட 1.7 சதவீதம் தான் வாய்ப்பிருப்பதாகவும் அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டியை உறுதிப்படுத்திவிட்டது, ஒருவேளை இந்திய அணி தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரை முழுமையாக வென்றால் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுவது உறுதிசெய்யப்படும்.

இந்தியாவின் சுழலில் தாக்குப்பிடிக்க முடியாமல் சுருண்ட ஆஸ்திரேலியா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை சந்தித்து முதலிடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி, பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்திருப்பது ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியாவை விமர்சனத்திற்குள் தள்ளியிருக்கிறது. ஏனென்றால் 2004ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல இந்த ஆஸ்திரேலிய அணிக்கு தான் மற்றொரு வாய்ப்பிருப்பதாக பல்வேறு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களால் சொல்லப்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் மாறுதலாக ஆஸ்திரேலியா இந்தியாவின் சுழற்பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியை சந்தித்துள்ளது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லபுசனேவை தவிர மற்ற எந்த வீரர்களிடமும் இருந்து எந்தவொரு பேட்டிங் தடுப்பாட்டமும் வெளிப்படவில்லை.

அஸ்வினை சமாளிக்க டூப்ளிகேட் அஸ்வினை பயன்படுத்தியும் பலனில்லை!

பல்வேறு எதிர்ப்பார்ப்புகளிடையே களம்புகுந்த ஆஸ்திரேலிய அணி, இந்தியாவிற்கு எதிராக பயிற்சி டெஸ்ட் போட்டியில் கூட விளையாடுவதற்கு விருப்பம் தெரிவிக்காமல், அஸ்வினை எதிர்கொள்வதற்காக அஸ்வின் போலவே பந்துவீசும் இந்தியாவின் பரோடா அணியின் மகேஷ் பிதியா என்ற இளைஞரை வைத்து பயிற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் போட்டியில் முதல் இன்னிங்ஸின் முதல் செஸ்ஸனில் அஸ்வினிற்கு எதிராக நல்ல தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினாலும், ஜடேஜா ஆஸ்திரேலியாவை சோதனைக்குள் தள்ளிவிட்டார். அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்நிலையில் 223 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, அவர்கள் நினைத்தது போலவே அஸ்வின் அதிர்ச்சியளிக்க காத்திருந்தார். அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அஸ்வினின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத ஆஸ்திரேலியா பேட்டர்கள் சீட்டுக்கட்டு போல் அஸ்வினிடம் சரிந்தனர். ஆடுகளத்தின் தன்மையை நுணுக்கமாக பயன்படுத்தி கொண்ட அஸ்வின், தனது சுழலில் ஆஸ்திரேலியாவை பொட்டலமே கட்டிவிட்டார். இறுதியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

ஆஸ்திரேலியா தப்பிக்க வழியே இல்லாமல் போய்விட்டது- மைக்கேல் வாகன்

ஆஸ்திரேலியாவின் தோல்வியை விமர்சித்துள்ள இங்கிலாந்தின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், ” ஆஸ்திரேலியா இந்திய மண்ணில் இப்படி படுதோல்வியை சந்தித்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இவர்கள் மட்டுமல்ல, இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக, பெரும்பாலான எல்லா அணிகளும் இதே சிகிச்சையை தான் சந்திக்க நேரிடும். அஸ்வின் மற்றும் ஜடேஜா போன்ற இரண்டு பேரின் கூட்டணியை, அவர்களின் சொந்த ஆடுகளங்களில் எதிர்கொள்வது என்பது கடினமான ஒன்றாகும். ஆஸ்திரேலியா அணியால் திரும்பவும் மீண்டு தப்பித்துவர வழியே இல்லை” என்று கூறியுள்ளார்.

No surprise at all that the Aussies got hammered in those conditions .. Most teams get the same treatment against such a good team .. @ashwinravi99 & @imjadeja are as hard a combination to face as any in there own home conditions .. See no way back for the Aussies #INDvsAUS
— Michael Vaughan (@MichaelVaughan) February 11, 2023