விளையாட்டு

90ஸ் கிட்ஸ்-களின் கலக்கல் நாயகன் ‘அண்டர்டேக்கர்’ - அதிரடி ஓய்வு அறிவிப்பு..!

90ஸ் கிட்ஸ்-களின் கலக்கல் நாயகன் ‘அண்டர்டேக்கர்’ - அதிரடி ஓய்வு அறிவிப்பு..!

jagadeesh

டபிள்யுடபிள்யுஇ (WWE) எனப்படும் ரெஸ்ட்லிங் போட்டிகளில் கொடிகட்டிப் பறந்த அண்டர்டேக்கர் ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அண்டர்டேக்கர் முதன் முதலில் 1984-ஆம் ஆண்டு பங்குபெற்றது வேர்ல்ட் கிளாஸ் சாம்பியன்ஷிப் மல்யுத்தம் எனப்படும் WCCW-ல் தான். இங்கு இவரது ரிங் பெயர் டெக்சாஸ் ரெட் என்று இருந்தது. பிறகு இங்கிருந்து பல மல்யுத்த போட்டிகளில், அமைப்புகளில் போட்டியிட்டு வந்தார். கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் ரெஸ்ட்லிங் போட்டிகளில் கொடி கட்டி பறந்தார். 1990-களில் வளர்ந்த குழந்தைகள் இவரின் பெயரை கேட்டாலே குதூகலம் அடைந்து விடுவார்கள் அந்த அளவிற்கு மக்கள் மனதில் தனக்கென இடமும் பிடித்திருந்தார்.

"தி லாஸ்ட் ரைடு" என்ற தொடரில் தன் முக்கிய போட்டி அனுபவங்களை பகிர்ந்து வந்தார் அண்டர்டேக்கர். அந்த தொடரின் கடைசி பகுதியில் தான் இனி ரிங்கில் வந்து சண்டையிட ஆசையில்லை என கூறி தன் ஓய்வை அறிவித்துள்ளார். எப்போதும் "அண்டர்டேக்கர்" என்றாலே மர்மம்தான், அவரின் ஓய்வு குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வந்தது. ஒவ்வொரு ரெஸ்ஸில்மேனியா போட்டிக்கு பின்பும் அவர் ஓய்வுப் பெறுவார் என கூறப்படும். ஆனால், இடையே சில போட்டிகளிலும், ஆண்டு முடிவில் ரெஸ்ஸில்மேனியா போட்டியிலும் ஆடுவார் அண்டர்டேக்கர். அப்படிதான் 2017 ஆம் ஆண்டு ரெஸ்ஸில்மேனியா போட்டியில் கோட்டையும் தொப்பியையும் வீசிவிட்டு விடைப்பெற்றார்.

ஆனால் அடுத்த சில மாதங்களுக்கு பின்பு மீண்டும் வந்தார் அண்டர்டேக்கர். ஆனால் 2017 ஆம் ஆண்டுக்கு பின்பு அண்டர்டேக்கர் WWE போட்டிகளில் பங்கேற்பதை குறைத்துக்கொண்டார் என்றே கூற வேண்டும். அதற்கு வயோதிகமும் ஒரு காரணம் என்றப் பேச்சும் இருக்கிறது. இந்நிலையில் இப்போது திட்டவட்டமாக தனது ஓய்வை அறிவித்துள்ளார் அண்டர்டேக்கர். ரிங்கில்தான் அவர் டெரர், ஆனால் நிஜத்தில் மிகவும் உதவும் குணம் கொண்டவர். அண்டர்டேக்கரின் இயற்பெயர் மார்க் வில்லியம் காலவே. அண்மையில் கூட கொரோனா பாதிப்பு காரணமாக உணவுக்காக கஷ்டப்படுபவர்களுக்காக நிதி சேர்த்து அவர்களுக்கு உதவியுள்ளார். இப்படி நிறைய சமூக சேவைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

தி அண்டர்டேக்கர் ஓய்வுக் குறித்து சொன்னது "ஒரு பாதையின் இறுதி வரை செல்லும் முன்னர் அது எவ்வளவு அழகான பயணம் என்பதை உங்களால் உணரவே முடியாது. எனக்குப் பிடித்த வகையில்தான் நான் செயலாற்றினேன். அப்படியே விலகவும் போகிறேன். எனக்கு இன்னொரு வாழ்க்கை உள்ளது. அதை நான் அனுபவிக்க வேண்டும். என் கடும் உழைப்பினால் கிடைத்தப் பலனை அனுபவிக்க வேண்டும்" என உணர்ச்சி வசப்பட்டுள்ளார். ஆம், உண்மைதான் கண்டங்களை கடந்து மக்களை மகிழ்வித்த கலைஞன் ஓய்வெடுக்க வேண்டும், வாழ்த்துகள் அண்டர்டேக்கர் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.